நாடு முழுவதும் மாவட்ட கோர்ட்டுகளில் ஊரடங்கு காலத்தில் காணொலி மூலம் 12 லட்சம் வழக்குகள் விசாரணை மாநிலங்களவையில் சட்ட மந்திரி தகவல்


நாடு முழுவதும் மாவட்ட கோர்ட்டுகளில் ஊரடங்கு காலத்தில் காணொலி மூலம் 12 லட்சம் வழக்குகள் விசாரணை மாநிலங்களவையில் சட்ட மந்திரி தகவல்
x
தினத்தந்தி 17 Sep 2020 11:59 PM GMT (Updated: 17 Sep 2020 11:59 PM GMT)

நாடு முழுவதும் மாவட்ட கோர்ட்டுகளில் ஊரடங்கு காலத்தில் காணொலி மூலம் 12 லட்சம் வழக்கு விசாரணைகள் நடந்ததாக மத்திய சட்ட மந்திரி தெரிவித்தார்.

புதுடெல்லி,

கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து இதுவரை சுப்ரீம் கோர்ட்டில் 35 புதிய நீதிபதிகளும், ஐகோர்ட்டுகளில் 557 புதிய நீதிபதிகளும் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும், ஐகோர்ட்டுகளில் 483 கூடுதல் நீதிபதிகள், நிரந்தரம் செய்யப்பட்டு இருப்பதாகவும் மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் கூறினார்.

இந்த காலகட்டத்தில் 3 ஆயிரத்து 173 கோர்ட்டுகள் கணினிமயமாக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் மாவட்ட கோர்ட்டுகள் மற்றும் சார்பு நீதிமன்றங்களில் கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ஜூலை 15-ந் தேதிவரை ஊரடங்கு காலத்தில் 11 லட்சத்து 93 ஆயிரம் விசாரணைகள், காணொலி காட்சி மூலம் நடைபெற்றதாகவும் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

மாநிலங்களவையில், நேற்று கொரோனா பற்றிய விவாதம் நடந்தது.

அதில் பேசிய பா.ஜனதா எம்.பி. லெப்டினன்ட் ஜெனரல் வாட்ஸ், “கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உயிரை பணயம் வைத்து செயல்படும் முன்கள பணியாளர்களுக்கு மத்திய அரசு, வீரதீர சாகச விருது அளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இதே விவாதத்தில் பேசிய ஆம் ஆத்மி உறுப்பினர் சிங், “கொரோனாவை கட்டுப்படுத்த கை தட்டுமாறும், விளக்கு ஏற்றுமாறும் பிரதமர் மோடி சொன்னது, முட்டாள்தனமானது. இப்படி கொரோனாவை தடுக்கலாம் என்று உலகத்தில் எங்காவது ஆராய்ச்சி நடந்துள்ளதா?” என்று கேட்டார்.

அதற்கு பதிலடியாக பா.ஜனதா உறுப்பினர் சுதன்சு திரிவேதி கூறியதாவது:-

கைதட்டுவதும், விளக்கு ஏற்றுவதும் ஒரு அடையாளம். வெள்ளையருக்கு எதிராக நாட்டை ஒருங்கிணைக்க மகாத்மா காந்தி எப்படி கைராட்டையை பயன்படுத்தினாரோ, அதேபோல், சமூகரீதியாக மக்களை ஒன்றுபடுத்தவே பிரதமர் அதை செய்ய சொன்னார். கைராட்டையை பயன்படுத்தினால், வெள்ளையர்கள் ஓடிவிடுவார்களா? என்று யாராவது கேட்கலாமா?

இவ்வாறு அவர் கூறினார்.

விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் பேசியதாவது:-

உலக அளவில் கொரோனா தடுப்பூசி உருவாக்கும் பணியை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்துவர வேண்டும். மலிவு விலையில் தடுப்பூசிகளை பெற வேண்டும். அதை கடைசி மூலையில் இருப்பவருக்கும் கிடைக்கும்வகையில் இப்போதே வியூகம் வகுக்க வேண்டும்.

அதே சமயத்தில், தடுப்பூசியின் தரம், பாதுகாப்பு ஆகியவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து பெறுவதற்கு இந்தியா உயர் முன்னுரிமை அளித்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளதரன் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்துவதற்காக, அரசுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையில் இந்தியா தீவிரமாக பங்கேற்று வருகிறது. நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை பெற கருத்தொற்றுமை கொண்ட நாடுகளின் ஆதரவை திரட்டி வருகிறது” என்றார்.

அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ‘மோடி நலமா?’ நிகழ்ச்சியில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன், பிரதமர் மோடி பங்கேற்று அமெரிக்க இந்தியர்களிடையே பேசினார்.

அந்த நிகழ்ச்சிக்காக மத்திய அரசு எதுவும் செலவிடவில்லை என்று ஒரு கேள்விக்கு பதில் அளித்தபோது வி.முரளதரன் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியை ‘டெக்சாஸ் இந்தியா போரம்’ என்ற தன்னார்வ அமைப்புதான் ஏற்பாடு செய்ததாக அவர் கூறினார்.

‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தின் இந்திய நிர்வாகம், இந்திய தேர்தல் நடைமுறையில் குறுக்கிட்ட புகார் குறித்து நாடாளுமன்ற குழு விசாரணை நடத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில், “2014-ம் ஆண்டில் இருந்து வெறுப்பை தூண்டும் பேச்சுகளை “பேஸ்புக்” இந்திய நிர்வாகம் அனுமதித்தது. பாரபட்சமாக நடந்து கொண்டது. அதுபற்றி ‘பேஸ்புக்’ தலைமையகம் விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.

Next Story