லடாக் பிராந்தியத்தில் ரோந்து செல்வதில் இருந்து உலகின் எந்த சக்தியாலும் இந்திய வீரர்களை தடுத்து நிறுத்த முடியாது ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆவேசம்


லடாக் பிராந்தியத்தில் ரோந்து செல்வதில் இருந்து உலகின் எந்த சக்தியாலும் இந்திய வீரர்களை தடுத்து நிறுத்த முடியாது ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆவேசம்
x
தினத்தந்தி 18 Sept 2020 5:47 AM IST (Updated: 18 Sept 2020 5:47 AM IST)
t-max-icont-min-icon

லடாக் பிராந்தியத்தில் ரோந்து செல்வதில் இருந்து உலகின் எந்த சக்தியாலும் இந்திய படைவீரர்களை தடுத்து நிறுத்த முடியாது என்று மாநிலங்களவையில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆவேசமாக குறிப்பிட்டார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் லடாக் எல்லை பிரச்சினை நேற்று எதிரொலித்தது. இந்த பிரச்சினையையொட்டி மக்களவையை போன்றே மாநிலங்களவையிலும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஒரு அறிக்கை அளித்தார்.

ஆனால் இந்த முக்கியமான பிரச்சினை குறித்து விவாதம் நடத்த தேவையில்லை என்று அரசும், எதிர்க்கட்சிகளும் ஒப்புக்கொண்டன.

இருந்தபோதிலும், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அளித்த அறிக்கை தொடர்பாக உறுப்பினர்கள் விளக்கம் கேட்பதற்கு சபைத்தலைவர் வெங்கையா நாயுடு அனுமதித்தார்.

அப்போது லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கின் குறிப்பிட்ட பகுதிகளில் இந்திய படைவீரர்கள் ரோந்து செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறப்படுவது பற்றி முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி விளக்கம் கோரினார்.

அதைத் தொடர்ந்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து கூறியதாவது:-

எல்லையில் சீனா படைகளை குவித்துள்ளது. அதற்கு பதில் அளிக்கிற வகையில் இந்தியாவும் பொருத்தமான பதில் நடவடிக்கையாக படைகளை அமர்த்தி உள்ளது.

எல்லையில் பதற்றத்தை தணிப்பதற்காக இரு தரப்பும் ராணுவம் மற்றும் ராஜதந்திர ரீதியில் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், லடாக் பிராந்தியத்தில் பங்கோங் ஏரியின் தென்கரை பகுதியில் நிலையை மாற்றும் முயற்சியாக ஆகஸ்டு 29/30 தேதியன்று சீனா ஆத்திரமூட்டும் ராணுவ சூழ்ச்சிகளை மேற்கொண்டது.

சீனாவின் சொல்லுக்கும், செயலுக்கும் இடையே மாறுபாடு உள்ளது.

சீனாவுடன் கடந்த மாதங்களில் ஏற்பட்ட மோதல்களில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன பக்கத்திலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இது, லடாக் எல்லையில் ரோந்து செல்வதில் ஏற்பட்ட பிரச்சினையால்தான் ஏற்பட்டது. லடாக் பிராந்தியத்தில் எல்லை பகுதியில் இந்திய படை வீரர்களை ரோந்து செல்வதில் இருந்து உலகில் எந்த சக்தியும் தடுத்து நிறுத்த முடியாது. நமது படை வீரர்கள் இதற்காகத்தான் உயிர்த்தியாகம் செய்தனர்.

ரோந்து பிரச்சினையால்தான் எல்லையில் மோதல்கள் ஏற்பட்டன என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ரோந்து செல்வது என்பது பாரம்பரியமானது. நன்கு வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவும், சீனாவும் இன்னும் எல்லை பிரச்சினையை தீர்க்க வில்லை. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லையின் வழக்கமான மற்றும் பாரம்பரியமான சீரமைப்பை சீனா ஏற்கவில்லை.

இந்த சீரமைப்பு, நன்று நிறுவப்பட்ட பூகோள கொள்கைகள் அடிப்படையிலானது என்று ஒப்பந்தங்களாலும், உடன்படிக்கைகளாலும் உறுதி செய்யப்பட்டது, வரலாற்று பயன்பாடு மற்றும் நடைமுறை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. இரு தரப்பினரும் பல நூற்றாண்டுகளாக நன்றாக அறியப்பட்டது என்று நாம் நம்புகிறோம்.

ஆனால் இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை முறையாக பிரிக்கப்படவில்லை, ஒவ்வொரு பக்கமும் வரலாற்று ரீதியாக பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் கூறும் அதிகார வரம்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு பாரம்பரிய தனிப்பயன் கோடு உள்ளது, பாரம்பரிய தனிப்பயன் கோடு தொடர்பாக இரு தரப்பினரும் வெவ்வேறு விளக்கங்களை கொண்டு இருக்கிறோம் என்பது சீனாவின் நிலைப்பாடு.

லடாக்கில் சுமார் 38 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவில் சீனா சட்ட விரோத ஆக்கிரமிப்பில் உள்ளது. மேலும், பாகிஸ்தான் 1963-ம் ஆண்டு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5,180 சதுர கி.மீ. இந்திய பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததையும் சீனா வைத்திருக்கிறது.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லை பகுதியில் இதுவரை வரையறுக்கப்பட்ட அசல் கட்டுப்பாட்டுகோடு இல்லை என்பதையும், அசல் கட்டுப்பாட்டுகோடு பற்றிய பொதுவான கருத்து எதுவும் இல்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

20 ஆண்டுகளுக்கு மேலான பழைய ஒப்பந்தங்கள், இரு தரப்பும் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் குறைந்த அளவிலான படைகளை நிறுத்த அனுமதிக்கின்றன.

ஆனால் சமீப காலமாக, கிழக்கு லடாக்கில் ஏப்ரல் மாதம் தொடங்கி சீனா தனது படைகளையும், தளவாடங்களையும் குவிப்பதை கவனிக்க முடிந்தது.

மே மாத தொடக்கத்தில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், நமது படை வீரர்களின் சாதாரண, பாரம்பரிய ரோந்துக்கு தடையாக சீனா நடவடிக்கை எடுத்தது. இதனால் நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில், மேற்கு செக்டாரில் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியை தாண்டி, பிற பகுதிகளிலும் சீனா அத்துமீறுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டது. இதில் கொங்கா லா, கோக்ரா மற்றும் பங்கோங் ஏரியின் வடக்கு கரை ஆகியவை அடங்கும். இந்த முயற்சிகள் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு, நமது படையினர் சரியான முறையில் பதிலடி கொடுத்தனர்.

இத்தகைய செயல்கள் மூலம் எல்லை நிலைமையை ஒரு தலைப்பட்சமாக மாற்றுவதற்கு சீனா முயற்சிக்கிறது என்பதை ராஜதந்திர, ராணுவ ரீதியிலான வழிகள்மூலம் நாம் தெளிவுபடுத்தினோம். இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

எல்லை கட்டுப்பாடு கோடு பகுதி மோதல்களை தொடர்ந்து, இரு தரப்பு மூத்த தளபதிகள் ஜூன் 6-ந் தேதி நடந்த கூட்டத்தில் படைகளை விலக்கிகொள்ள பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்டது. எல்லை கட்டுப்பாட்டு கோடை மதிக்கவும், பின்பற்றவும், நிலைமையை மாற்ற எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இருப்பினும், சீன தரப்பு இதை மீறி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஜூன் 15-ந் தேதி வன்முறை மோதலை உருவாக்கியது. நமது துணிச்சலான வீரர்கள் தங்கள் உயிரைக்கொடுத்தனர். சீன தரப்பிலும் உயிரிழப்புகளை ஏற்படுத்தினர்.

இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளின் போதும் நமது படை வீரர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டனர். இந்தியாவின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க வீரத்தை காட்டினர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story