எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்கின்றன வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் பாதுகாப்பு கவசம் பிரதமர் மோடி பேச்சு


எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்கின்றன வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் பாதுகாப்பு கவசம் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 19 Sept 2020 5:06 AM IST (Updated: 19 Sept 2020 5:06 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் மசோதாக்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்வதாகவும், அந்த மசோதாக்கள் விவசாயிகளின் பாதுகாப்பு கவசமாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

பீகார் மாநிலத்தில், கோசி ஆற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்டமான ரெயில் பாலம் உள்ளிட்ட பல்வேறு ரெயில் திட்டங்களை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், துணை முதல்-மந்திரி சுஷில் மோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறைந்த வாஜ்பாய் பிரதமராகவும், தற்போதைய பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ரெயில்வே மந்திரியாகவும் இருந்த போது 2003-ம் ஆண்டில் கோசி ரெயில் பாலம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பிறகு அந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

வேளாண் மசோதாக்கள்

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய 3 மசோதாக்கள் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார். அவர் பேசுகையில் கூறியதாவது:-

விவசாயிகளின் நலனுக்காகவும், வேளாண் துறையை மேம்படுத்துவதற்காகவும் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்களும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கும். இடைத்தரகர்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும். இனி அவர்கள் கட்டுப்பாடு இன்றி எங்கு வேண்டுமானாலும் தங்கள் விளைபொருட்களை பேரம் பேசி விற்க முடியும். இதனால் அவர்களுக்கு இனி அதிக லாபம் கிடைக்கும்.

முன்பு பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போது விவசாயிகளின் நலனுக்காக எதுவும் செய்யாதவர்கள், தற்போது பாரதீய ஜனதா அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்கள் குறித்து பொய்யான தகவல்களை கூறி விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்கள். அந்த கட்சிகள் இடைத்தரகர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு விவசாயிகளை ஏமாற்றுகின்றன. விவசாய விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்வதும், அவற்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவதும் தொடர்ந்து நீடிக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Next Story