நாடாளுமன்றத்தில் 3 தொழிலாளர் மசோதாக்கள் தாக்கல் காங்கிரஸ் எதிர்ப்பு


நாடாளுமன்றத்தில் 3 தொழிலாளர் மசோதாக்கள் தாக்கல் காங்கிரஸ் எதிர்ப்பு
x
தினத்தந்தி 20 Sept 2020 12:48 AM IST (Updated: 20 Sept 2020 12:48 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றி வருகிறது.

அந்த வகையில் தொழிலாளர் சட்டங்கள் தொடர்பான 3 மசோதாக்களை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது.

“தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிபந்தனைகள் குறியீடு 2020”; “தொழில்துறை உறவுகள் குறீயீடு 2020” மற்றும் “சமூக பாதுகாப்பு குறித்த குறியீடு 2020” ஆகிய மசோதாக்களை மத்திய தொழில்துறை மந்திரி சந்தோஷ் குமார் கங்வார் தாக்கல் செய்தார்.

தொழிலாளர் சட்டங்கள் தொடர்பாக கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட 3 மசோதாக்களை வாபஸ் பெற்று புதிய மசோதாக்களை அவர் தாக்கல் செய்தார்.

29 தொழிலாளர் சட்டங்கள் 4 குறியீடுகளாக இணைக்கப்பட்டுள்ளன என்றும் அவற்றில் ஒன்று ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் மந்திரி சந்தோஷ் குமார் கங்வார் குறிப்பிட்டார்.

“ஊதியங்கள் குறித்த மசோதா 2019” கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் தலைவர்கள் மணீஷ் திவாரி மற்றும் சசிதரூர் ஆகியோர் இந்த புதிய 3 மசோதாக்கள் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த 3 மசோதாக்களும் அவற்றின் முந்தைய படிவங்களின் அடிப்படையில் மாற்றப்பட்ட பதிப்புகள் என்றும், எனவே அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Next Story