மாநிலங்களவையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி.க்கள் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள் சந்திரசேகரராவ் அறிவிப்பு


மாநிலங்களவையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி.க்கள் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள் சந்திரசேகரராவ் அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Sept 2020 4:30 AM IST (Updated: 20 Sept 2020 1:11 AM IST)
t-max-icont-min-icon

மாநிலங்களவையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி.க்கள் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று சந்திரசேகர ராவ் கூறி உள்ளார்.

ஐதராபாத்,

விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய 3 மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இனி இந்த மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்த நிலையில், இந்த மசோதாக்கள் தொடர்பாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும், தெலுங்கானா முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு அநீதி இழைப்பதாகவும், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் உள்ளது. விவசாயிகளின் நலனுக்கு எதிரான இந்த மசோதாக்களால் வேளாண் துறைக்கு பெரும் இழப்பு ஏற்படும்.

விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை நாட்டின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று விற்பனை செய்து கொள்ளலாம் என்று இந்த மசோதாவில் கூறப்பட்டு உள்ளது. ஆனால் நடைமுறையில் வியாபாரிகள்தான் நாட்டின் எந்த பகுதிக்கும் சென்று விளைபொருட்களை வாங்க இந்த மசோதா உதவி செய்வதாக இருக்கும். போக்குவரத்து செலவு அதிகமாக இருக்கும் நிலையில், விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த குறைவான விளைபொருட்களை தொலைதூர இடங்களுக்கு கொண்டு செல்வது எப்படி சாத்தியமாகும்?

இந்த மசோதாக்கள் இனிப்பு தடவப்பட்ட மாத்திரைகள் என்பதால் இதை நாங்கள் எதிர்க்கிறோம். எனவே மாநிலங்களவையில் இந்த மசோதாக்களை எதிர்த்து தெலுங்கானா ராஷ்டிர சமிதி உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்.

வெளிநாட்டில் இருந்து 1 கோடி டன் சோளம் இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ள மத்திய அரசு, ஏற்கனவே 70 லட்சம் டன் சோளத்தை வாங்கிவிட்டது. இதற்கான இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டு உள்ளது. நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நிலையில், யார் ஆதாயம் பெறுவதற்காக இறக்குமதி வரி குறைக்கப்பட்டது?

இந்தியாவில் அதிக அளவில் சோளம் உற்பத்தி செய்யப்படும் நிலையில், இறக்குமதி வரியை குறைத்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தால் நம் விவசாயிகளின் நிலைமை என்ன ஆகும்?

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு 7 உறுப்பினர்கள் உள்ளனர்.

Next Story