70 ஆண்டுகளாக சந்தித்த அநீதியில் இருந்து விவசாயிகளை விடுவித்துள்ளார் பிரதமர் மோடி; ஜே.பி. நட்டா


70 ஆண்டுகளாக சந்தித்த அநீதியில் இருந்து விவசாயிகளை விடுவித்துள்ளார் பிரதமர் மோடி; ஜே.பி. நட்டா
x
தினத்தந்தி 20 Sept 2020 2:44 PM IST (Updated: 20 Sept 2020 3:52 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் 70 ஆண்டுகளாக சந்தித்து வந்த அநீதியில் இருந்து அவர்களை பிரதமர் மோடி விடுவித்துள்ளார் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் இன்று மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாக்களின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள், சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது எனவும் திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தன.  எதிர்க்கட்சிகளின் கடும் அமளியை அடுத்து மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.

இதன்பின்னர் அவை மீண்டும் கூடியது.  வேளாண் மசோதாக்கள் பற்றி விவாதங்கள் நடைபெற்றன.  எனினும் உறுப்பினர்கள் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர்.

இந்நிலையில், வேளாண் மசோதாக்களுக்கான குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது.  இவற்றில் அந்த மசோதாக்கள் எதிர்க்கட்சியினர் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.  இதனை தொடர்ந்து மேலவை நாளை காலை 9 மணி வரை ஒத்தி வைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

இதன்பின்னர் வேளாண் மசோதா நிறைவேற்றம் பற்றி பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறும்பொழுது, கடந்த 70 ஆண்டுகளாக விவசாயிகள் சந்தித்து வந்த அநீதியில் இருந்து அவர்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு விடுவித்துள்ளது.  எதிர்க்கட்சிகள் அனைத்தும் விவசாயிகளுக்கு எதிரானது.

வேளாண் மசோதா நடைமுறைப்படுத்தும் அரசின் முயற்சியில் அவர்கள் ஒரு பகுதியாக இருப்பதற்கு பதிலாக, விவசாயிகளின் சுதந்திரத்தினை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.  அவர்களது இந்த செயலை பா.ஜ.க. கண்டிக்கிறது என்று கூறியுள்ளார்.

Next Story