திருமலை திருப்பதி பிரம்மோற்சவ இரண்டாம் நாள்: ஹம்சவாகனத்தில் வலம் வந்த மலையப்பசுவாமி


திருமலை திருப்பதி பிரம்மோற்சவ இரண்டாம் நாள்: ஹம்சவாகனத்தில் வலம் வந்த மலையப்பசுவாமி
x
தினத்தந்தி 20 Sep 2020 5:53 PM GMT (Updated: 20 Sep 2020 5:53 PM GMT)

திருமலை திருப்பதி பிரம்மோற்சவ இரண்டாம் நாளான இன்று வெண்பட்டு உடுத்தி வீணை ஏந்திய சரஸ்வதி அலங்காரத்தில் ஹம்ச வாகனம் எனப்படும் அன்ன வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளினார்.

திருமலை,

திருமலை ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கி, 27ஆம்தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியின்போது ஏழுமலையானின் சேனாதிபதி யான விஸ்வகேசவர் நான்கு மாட வீதிகளில் பவனி வந்துபிரம்மோற்சவ ஏற்பாடுகளைமேற்பார்வையிடுவார் என்பது ஐதீகம்.

இந்தநிலையில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தருவார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சில ஆயிரம் பேர் மட்டுமே திருமலைக்கு வந்துள்ளனர்.

திருமலை திருப்பதி பிரம்மோற்சவ இரண்டாம் நாளான இன்று இரவு 9 மணிக்கு வெண்பட்டு உடுத்தி வீணை ஏந்திய சரஸ்வதி அலங்காரத்தில் ஹம்ச வாகனம் எனப்படும் அன்ன வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளினார்.

கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இல்லாமல் கோவிலுக்குள் நடந்த இந்த வைபவத்தில் கோவிலின் முக்கிய அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனர். இதே போல காலையில் சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளினார்.

இன்றைய சிறப்பம்சமாகவும் பிரம்மோற்சவத்தின் ஒரு நிகழ்வாகவும் பெருமாளை புனித நீரால் நீராட்டும் ஸ்நப்ன திருமஞ்சனம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இளநீர்,தயிர்,பால்,மஞ்சள்,சந்தனம் போன்றவைகளால் நீராட்டல் நடைபெற்றது.

நாளை காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை சிம்ம வாகனத்திலும் இரவு 9 மணியில் இருந்து 11 மணிவரை முத்து பந்தல் வாகனத்திலும் மலையப்பசுவாமி எழுந்தருளுவார்.

22ஆம் தேதி கல்ப விருட்சம் சர்வ பூபால வாகனம், செப்டம்பர் 23 மோகினி அவதாரம், கருட சேவை, செப்டம்பர் 24 அனுமந்த வாகனம், யானை வாகனம், செப்டம்பர் 25 சூரிய பிரபை, சந்திரபிரபை வாகனங்கள். செப்டம்பர் 26 குதிரை வாகனம். செப்டம்பர் 27 தீர்த்தவாரி கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை முழுவதும் வண்ண மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த ஆண்டு திருமலையில் மக்கள் கூட்டம் குறைவாகவே உள்ளது. பிரம்மோற்சவ நாள்களில் பக்தா்கள் வழக்கம் போல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். இந்த ஆண்டு பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவு தரிசனம், விஐபி பிரேக் தரிசனங்களில் மட்டுமே பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Next Story