மராட்டிய கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு - பிரதமர் மோடி இரங்கல்
மராட்டிய கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
தானே,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் உள்ள படேல் காம்பவுண்டில் அமைந்துள்ள 3 மாடிக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு கட்டிடம் இடிந்து விழுந்ததால், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காலையில் 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. சுமார் 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்பின்னர் மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து முழுவீச்சில் மீட்பு பணி நடைபெறுகிறது.
இதற்கிடையே, கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ மாராட்டிய மாநிலம் பிவண்டி பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து குறித்த செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். கட்டிடம் இடிந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவாக குணம் அடைய பிரார்த்திக்கிறேன். மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்’ என்றார்.
Related Tags :
Next Story