வேளாண் மசோதாக்கள் பற்றி விவசாயிகளிடம் எதிர்க்கட்சிகள் பொய் சொல்லி வருகின்றன - பிரதமர் மோடி தாக்கு


வேளாண் மசோதாக்கள் பற்றி விவசாயிகளிடம் எதிர்க்கட்சிகள் பொய் சொல்லி வருகின்றன - பிரதமர் மோடி தாக்கு
x
தினத்தந்தி 22 Sept 2020 3:00 AM IST (Updated: 22 Sept 2020 1:06 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் மசோதாக்கள் குறித்து விவசாயிகளிடம் எதிர்க்கட்சிகள் பொய் சொல்லி வருகின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.

பாட்னா,

பீகார் மாநிலத்தில் 9 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். அங்குள்ள அனைத்து கிராமங்களையும் இணைக்கும் கண்ணாடி இழை இணைய சேவையையும் தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் பேசியதாவது:-

வேளாண் சீர்திருத்தங்களை உருவாக்கும் வேளாண் மசோதாக்கள், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. தாங்கள் ஆட்சியில் இருந்தபோது, விவசாயிகளை பற்றி கவலைப்படாத எதிர்க்கட்சிகள், இந்த மசோதாவை எதிர்க்கின்றன.

இவை விவசாயிகள் நலனுக்கு எதிரானவை என்று விவசாயிகளை குழப்பி வருகின்றன. குறைந்தபட்ச ஆதார முறை நீடிக்காது என்று பொய் சொல்லி வருகின்றன.

ஆனால், உண்மை என்னவென்றால், மாநிலங்களில் விவசாயிகள் பாதுகாப்புக்கென ஏற்கனவே உள்ள நடைமுறைகள் நீடிக்கும். குறைந்தபட்ச ஆதார விலை முறை தொடரும். விவசாயிகளின் விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்யும். உழவர் சந்தைகளும் நீடிக்கும்.

இதற்கு முன்பு எந்த அரசும் செய்யாதவகையில், அதிகமான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்துள்ளோம்.

கொரோனா சமயமாக இருந்தபோதிலும், சாதனை அளவு தானியங்களை கொள்முதல் செய்து, 30 சதவீதம் அதிக பணம் அளித்துள்ளோம். வேளாண் துறையில் வளர்ச்சி பதிவாகி உள்ளது.

இந்த மசோதாக்கள், 21-ம் நூற்றாண்டுக்கு அவசியம் ஆகும். வேளாண் துறையை ஊக்குவிப்பதுடன், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படும். விவசாயிகள், தாங்கள் விரும்பிய இடத்திலும், விரும்பிய விலையிலும் விளைபொருட்களை விற்க முடியும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Next Story