தேநீர் வழங்க முன்வந்த ஹரிவன்ஷின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது: பிரதமர் மோடி
தன்னை அவமதித்த எம்.பிக்களுக்கு தேநீர் வழங்க முன்வந்த ஹரிவன்ஷின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட போது, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையில் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்து மாநிலங்களை தலைவர் வெங்கையா நாயுடு நடவடிக்கை எடுத்தார்.
இதையடுத்து, நாடாளுமன்ற வளாக்தில் நேற்று மாலை முதல் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பிக்களும் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காந்தி சிலை முன்பாக தர்ணாவில் ஈடுபட்டுள்ள எம்.பிக்களுக்கு, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் இன்று காலை தேநீர் கொண்டுவந்தார். ஆனால், அவர் கொண்டு வந்த தேநீரை பருக மறுத்த எம்.பிக்கள், விளம்பரத்திற்காக ஊடகங்களை அழைத்துக்கொண்டு ஹரிவன்ஷ் இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என விமர்சித்தனர்.
இந்த நிலையில், மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ தன்னை அவமதித்த எம்.பிக்களுக்கு, நேரில் சென்று தேநீர் வழங்க ஹரிவன்ஷ் முன்வந்தது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. ஹரிவன்ஷை வாழ்த்துவதில் நாட்டு மக்களோடு நானும் இணைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story