நாட்டை விற்கும் நபர்களை அதிகாரத்தில் இருந்து நீக்கும்வரை போராட்டம் ஓயாது; திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஆவேசம்


நாட்டை விற்கும் நபர்களை அதிகாரத்தில் இருந்து நீக்கும்வரை போராட்டம் ஓயாது; திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஆவேசம்
x
தினத்தந்தி 22 Sept 2020 2:55 PM IST (Updated: 22 Sept 2020 2:55 PM IST)
t-max-icont-min-icon

நாட்டை விற்கும் நபர்களை அதிகாரத்தில் இருந்து நீக்கும்வரை எங்கள் போராட்டம் ஓயாது என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தோலா சென் ஆவேசமுடன் கூறினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மேலவையில் 2 வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நடந்த விவாதத்தின்போது கடும் அமளி ஏற்பட்டது.  அவையின் மைய பகுதிக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் வந்து அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.

இந்த சூழலில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார்கள்.  காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகளின் உறுப்பினர்கள் அவை துணை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதன்பின் குரல் வாக்கெடுப்பு நடத்தி 2 வேளாண் மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.  எனினும், அவையில் விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட உறுப்பினர்கள் 8 பேரை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்து  அவை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.

இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 8 எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இரவு முழுவதும் காந்தி சிலை முன்பே அமர்ந்த எம்.பி.க்கள், தங்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என கூறினர்.

இதன்பின்பு நாடாளுமன்ற வளாகத்தில் தங்களது போராட்டத்தினை அவர்கள் இன்று காலை முடித்து கொண்டனர்.  இந்நிலையில், சஸ்பெண்டு செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் மேலவை எம்.பி.யான தோலா சென் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து இன்று பேசினார்.

அவர் கூறும்பொழுது, நாங்கள் விவசாயிகளுக்காக, தொழிலாளர்களுக்காக, நாட்டிற்காக மற்றும் மனித குல நன்மைக்காக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.  நாட்டை விற்று கொண்டிருப்பவர்களை அதிகாரத்தில் இருந்து நீக்கும்வரை தொடர்ந்து போராடுவோம்.

அவையில் இருந்து சஸ்பெண்டு செய்வது என்பது பெரிய விசயம் இல்லை.  ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து உள்ளோம்.  நாங்கள் அவையின் கூட்டத்தொடரை புறக்கணிப்போம் என கூறினார்.

Next Story