எல்லையில் கூடுதல் படைகள் அனுப்புவது நிறுத்தப்படும்; இந்தோ-சீனா கூட்டறிக்கை வெளியீடு
எல்லையில் கூடுதல் படைகள் அனுப்புவது நிறுத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய இந்தோ-சீனா கூட்டறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா மற்றும் சீனா படையினர் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து எல்லையில் பதற்ற நிலை உருவானது.
இதன்பின் இரு நாட்டு மூத்த தளபதிகள் மட்டத்தில் பல சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனா நாடுகளின் மூத்த தளபதிகள் கலந்து கொண்ட ராணுவ தளபதி மட்டத்திலான 6வது சுற்று கூட்டம் நடைபெற்று வந்தது. பல மணிநேரம் நடந்த இந்த கூட்டத்தில், இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான எல்லை பகுதிகளில் நிலைத்தன்மைக்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான ஆழ்ந்த விசயங்களை இரு தரப்பினரும் பரிமாறி கொண்டனர்.
இதன் முடிவில் இரு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டு உள்ளது. அதில், இந்தியா, சீனா தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்தொற்றுமையை அமல்படுத்துவது என ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
எல்லையில் தொலைதொடர்பினை வலுப்படுத்துதல், தவறான புரிதல்களை தவிர்த்தல், எல்லையை நோக்கி கூடுதல் படைகளை அனுப்பி வைப்பதனை நிறுத்தி கொள்ளல், ஒரு தலைப்பட்சம் ஆக எல்லை பகுதியில் சூழ்நிலையை மாற்றும் போக்கை கைவிடுதல் மற்றும் நிலைமையை சிக்கலாக்கும் எந்த நடவடிக்கையையும் தவிர்த்தல் ஆகியவை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதேபோன்று இரு தரப்பும், 7வது சுற்று ராணுவ தளபதி மட்டத்திலான கூட்டம் ஒன்றை விரைவில் நடத்தவும் ஒப்பு கொண்டுள்ளன. எல்லை பகுதியில் விவகாரங்களை முறையாக தீர்ப்பது, அமைதியை கூட்டாக பாதுகாப்பது ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை எடுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story