கொரோனாவுக்கு மூக்குவழியாக செலுத்தும் தடுப்பூசி அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்


கொரோனாவுக்கு மூக்குவழியாக செலுத்தும் தடுப்பூசி அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்
x
தினத்தந்தி 24 Sept 2020 4:45 AM IST (Updated: 24 Sept 2020 3:55 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் கொரோனாவை தடுக்க மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

அமெரிக்காவில் கொரோனாவை தடுக்க மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்து வினியோகிக்க அமெரிக்க நிறுவனத்துடன் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசியை (இன்ட்ராநாசல் வேக்சின்) அமெரிக்காவில் செயிண்ட் லூயிஸ் நகரில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி உருவாக்கி உள்ளது.

இது ஒரு முறை மட்டுமே மூக்கில் செலுத்தத்தக்கது.

இந்த தடுப்பூசி ‘சிம்ப்-அடினோவைரஸ்’ தடுப்பூசி ஆகும். கொரோனா வைரஸ், எபோலா வைரஸ் மற்றும் காசநோய் போன்ற பிற தொற்று நோய்களுக்கான தடுப்பூசிகளுக்கு அடினோ வைரஸ் அடிப்படை ஆகும். அவை நல்ல பாதுகாப்பு மற்றும் செயல்திறன் பதிவுகளை கொண்டுள்ளன. ஆனால் இந்த தடுப்பூசிகளை மூக்கு வழியாக செலுத்துவது தொடர்பாக அதிகளவில் ஆராய்ச்சி நடத்தப்படவில்லை.

பாரத் பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம்

இந்த தடுப்பூசியை இன்னும் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கவில்லை. விரைவில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி மற்றும் சிகிச்சை மதிப்பீட்டு பிரிவில் முதல் கட்ட மருத்துவ பரிசோதனை நடக்க உள்ளது.

இந்த தடுப்பூசியை இந்தியாவில் தேவையான ஒழுங்குமுறை ஒப்புதலை பெற்றபின், அதன் அடுத்த கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்தவும், ஐதராபாத்தில் ஜீனோம் பள்ளத்தாக்கில் உள்ள உற்பத்தி மையத்தில் பெரிய அளவில் உற்பத்தி செய்வதற்கும் பாரத் பயோடெக் நிறுவனம், வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியுடன் உரிம ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது.

இந்த ஒப்பந்தம், அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா தவிர்த்து பிற நாடுகளில் இந்த தடுப்பூசியை தயாரித்து சந்தையிட அனுமதி அளிக்கிறது.

100 கோடி தடுப்பூசி

இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வைரஸ் தடுப்பூசிகள், உற்பத்தி திறன்கள் மற்றும் வினியோகம் குறித்த எங்கள் அனுபவம் பாதுகாப்பான, செயல்திறன்மிக்க, மலிவு விலையுள்ள தடுப்பூசிகளை உறுதி செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை, உலகின் அனைத்து குடிமக்களுக்கும் வழங்குவதில் மாறுபட்ட ஆனால் தகுதியான திட்டங்களில் ஈடுபடுவது விவேகம்.

இந்த தடுப்பூசியை 100 கோடி டோஸ் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். ஒருவருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தினால் போதும் என்பதால் 100 கோடி டோஸ் தடுப்பூசிகளை 100 கோடி பேருக்கு செலுத்த முடியும். இந்த தடுப்பூசி போடுவதற்கு எளிதானது மட்டுமல்ல, ஊசிகள், சிரிஞ்சுகள் போன்ற மருத்துவ நுகர்பொருட்களின் உபயோகத்தையும் குறைக்கும். இதனால் தடுப்பூசியின் ஒட்டுமொத்த செலவும் கணிசமாக குறையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதுடன், மூக்கு மற்றும் தொண்டை வழித்தட செல்களில் நோய் எதிர்ப்புச்சக்தியையும் வழங்குவதால் பிற நோய் பரவலையும் தடுக்கும் என்று சொல்லப்படுகிறது. இதை பிற தடுப்பூசிகள் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story