தொடர்ந்து 5-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகம்


தொடர்ந்து 5-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகம்
x
தினத்தந்தி 23 Sep 2020 11:30 PM GMT (Updated: 2020-09-24T03:58:31+05:30)

தொடர்ந்து 5-வது நாளாக, தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட தினசரி குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 83 ஆயிரத்து 347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56 லட்சத்து 46 ஆயிரத்து 11 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில், 9 லட்சத்து 68 ஆயிரத்து 377 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர். இது, மொத்த பாதிப்பில் 17.15 சதவீதம் ஆகும்.

இதுவரை 45 லட்சத்து 87 ஆயிரத்து 613 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்கள் விகிதம் 81.25 சதவீதம். மீதி 1.59 சதவீதம்பேர் உயிரிழந்து விட்டனர்.

கடந்த 24 மணி நேரத்தில், 89 ஆயிரத்து 746 பேர் குணமடைந்துள்ளனர். இது, புதிய பாதிப்பு எண்ணிக்கையை விட அதிகம். இதன்மூலம், தொடர்ந்து 5-வது நாளாக, தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட தினசரி குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், புதிய பாதிப்பை விட புதிதாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகம். புதிதாக குணமடைந்தவர்களில் 75 சதவீதம்பேர், தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

தினசரி குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில் மராட்டிய மாநிலம் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோருடன் முதலிடத்தில் இருக்கிறது. அதையடுத்து, 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோருடன் மேற்கு வங்காளம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

உலக அளவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம். இது, உலகளாவிய குணமடைந்தவர்கள் விகிதத்தில் 19.5 சதவீதம் ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில், 1,085 பேர் கொரோனாவுக்கு பலியாகி விட்டனர். இதன்மூலம், இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 90 ஆயிரத்து 20 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 9 லட்சத்து 53 ஆயிரத்து 683 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இதுவரை பரிசோதிக்கப்பட்ட மொத்த மாதிரிகள் எண்ணிக்கை 6 கோடியே 62 லட்சத்து 79 ஆயிரத்து 462 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story