பீகார் சட்டசபை தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெறும்; தலைமை தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு
பீகார் சட்டசபை தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பீகாரில் முதல் மந்திரி நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபையின் பதவி காலம் வருகிற நவம்பர் 29ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு சட்டசபை தேர்தலை நடத்துவது பற்றி இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அவர் செய்தியாளர்களிடையே பேசும்பொழுது, கொரோனா பாதிப்பு காரணமாக 70 நாடுகள் தேர்தலை தள்ளிவைத்துள்ளன. பீகார் தேர்தலை நடத்த அதிக மனிதவளம், கட்டமைப்பு தேவைப்படுகிறது என கூறினார்.
வாக்காளர்கள் நெரிசல் இல்லாமல் வாக்களிக்கும் வகையில் பீகார் தேர்தல் வாக்களிப்பு நேரம், ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படுகிறது. 1,500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்பது, ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு மையம் என நிர்ணயம் செய்யப்படும்.
இதன்படி, காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைவதற்கு பதிலாக, காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்கு பதிவு நடைபெறும். எனினும், மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்நேர நீட்டிப்பு இருக்காது என அரோரா கூறியுள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு அக்டோபர் 28ந்தேதி தேர்தல் நடைபெறும். 2வது கட்டமாக 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3ந்தேதியும், 3வது கட்டமாக 78 தொகுதிகளுக்கு நவம்பர் 7ந்தேதியும் தேர்தல் நடைபெறும் என அறிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story