ஹத்ராஸில் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்காமல் பின்வாங்க மாட்டோம் - ராகுல்காந்தி பேட்டி


ஹத்ராஸில் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்காமல் பின்வாங்க மாட்டோம் - ராகுல்காந்தி பேட்டி
x
தினத்தந்தி 1 Oct 2020 3:27 PM IST (Updated: 1 Oct 2020 3:27 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்காமல் பின்வாங்க மாட்டோம் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

லக்னோ,

உ.பி.யின் ஹத்ராஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், அந்தப் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர்

ராகுல், பிரியங்கா காந்தி வாகனங்கள் கிரேட்டர் நொய்டாவில் யமுனா எக்ஸ்பிரஸ் சாலை வழியாக பாரிக் சவுக் பகுதியில் வந்தபோது, மாவட்ட அதிகாரிகள், போலீஸார் மறித்தனர். மாவட்ட எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அனுமதிக்க மறுத்தனர். இதனால் அதிகாரிகளுடன் ராகுல், பிரியங்கா, காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்குப் பிறகு பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் கால்நடையாக நடக்கத் தொடங்கினர்.

காஜியாபாத்தில் அவர்களை வரவேற்க ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர். ராகுல், பிரியங்காவுடன் காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவும் சென்றுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

முன்னதாக ராகுல்காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஹத்ராஸுக்கு செல்லும் வழியில் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் செல்லும் போது போலீசார் என்னைத் தள்ளி, லாத்தி சார்ஜ் செய்து தரையில் தூக்கி வீசினர்.

நான் கேட்க விரும்புகிறேன், மோடி ஜி மட்டுமே இந்த நாட்டில் நடக்க வேண்டுமா? ஒரு சாதாரண மனிதன் நடக்க கூடாதா? எங்கள் வாகனம் நிறுத்தப்பட்டது, எனவே தான் நாங்கள் நடக்க ஆரம்பித்தோம்.  பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்காமல் பின்வாங்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீசார் நடத்திய தடியடியில் காங்கிரஸ் தொண்டர்கள் பலர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story