ஹாத்ராஸ் இளம்பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை - உ.பி. ஏ.டி.ஜி.பி பிரசாந்த் குமார் தகவல்


ஹாத்ராஸ் இளம்பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை - உ.பி. ஏ.டி.ஜி.பி பிரசாந்த் குமார் தகவல்
x
தினத்தந்தி 1 Oct 2020 4:00 PM IST (Updated: 1 Oct 2020 4:00 PM IST)
t-max-icont-min-icon

ஹாத்ராஸ் இளம்பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று உ.பி. ஏ.டி.ஜி.பி பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயதான பட்டியல் இன இளம்பெண், கடந்த மாதம் 14-ந் தேதி அங்குள்ள நிலத்தில் புல் அறுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அக்கிராமத்தை சேர்ந்த உயர் ஜாதி இளைஞர்கள் 4 பேர், அந்த பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அப்போது, பெண்ணை கடுமையாக தாக்கினர். இதை வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக, நாக்கையும் அறுத்ததாக தெரிகிறது.

ரத்த வெள்ளத்தில் சாலையோரம் கண்டெடுக்கப்பட்ட அந்தப் பெண் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவர் தில்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பெண், கழுத்து முதுகுப் பகுதிகளில் எலும்பு முறிவுகளுடன் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் அவர் செவ்வாய்க்கிழமை பலியானார்.

உ.பி. காவல்துறை தங்களுக்கு உதவி எதுவும் செய்யவில்லை என்றும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தநிலையில் புதன்கிழமை அதிகாலை அப்பெண்ணின் உடல் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு உ.பி.காவல்துறையினரால் எரியூட்டப்பட்டார். குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமல் காவல்துறை அவரது உடலை எரியூட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் ஹாத்ராஸ் இளம்பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று உ.பி. ஏ.டி.ஜி.பி பிரசாந்த் குமார் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதிக்கப்பட்ட இளம்பெண் இறந்துவிட்டார் என்று பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. எஃப்எஸ்எல் அறிக்கை மாதிரிகளில் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது.

சாதி அடிப்படையிலான பதற்றத்தைத் தூண்டுவதற்காக சில விஷமிகள் இந்த விஷயத்தை திசை திருப்புகிறார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது. அத்தகைய நபர்கள் அடையாளம் காணப்படுவார்கள் மற்றும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story