உ.பி.யில் நாள்தோறும் 11 பலாத்கார வழக்குகள் பதிவு: பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வரை தொடர்ந்து போராடுவேன் - பிரியங்கா காந்தி பேட்டி


உ.பி.யில் நாள்தோறும் 11 பலாத்கார வழக்குகள் பதிவு: பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வரை தொடர்ந்து போராடுவேன் - பிரியங்கா காந்தி பேட்டி
x
தினத்தந்தி 1 Oct 2020 4:35 PM IST (Updated: 1 Oct 2020 4:35 PM IST)
t-max-icont-min-icon

உ.பி.யில் நாள்தோறும் 11 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வரை தொடர்ந்து போராடுவேன் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

லக்னோ,

 உத்தரபிரதேசத்தில் உள்ள ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் முடிவு செய்து இன்று ஹத்ராஸ் சென்றனர்.

ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில், மாவட்ட எல்லைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். யமுனா எக்ஸ்பிரஸ் சாலை வழியாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி சென்ற காரை மாவட்ட அதிகாரிகள், போலீசார் மறித்தனர். மாவட்ட எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் அதிகாரிகளுடன் ராகுல், பிரியங்கா, காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைதொடர்ந்து அதிகாரிகளின் தடையை மீறி நடக்க தொடங்கினர்.

அப்போது பிரியங்கா காந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

உத்தரப்பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு முதல்வர் ஆதித்யநாத் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வரை தொடர்ந்து போராடுவேன். நாள்தோறும் பெண்கள் பலாத்காரம் நடக்கிறது, உ.பி.யில் நாள்தோறும் 11 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யபப்டுகின்றன. இதுபோன்று பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, ஆனால், அரசு ஏதும் செய்யவில்லை.

மாநிலத்தில் உள்ள ஆளும் பாஜக அரசு, பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணுக்கு இறுதிச்சடங்கு செய்யக்கூட குடும்பத்தினரை அனுமதிக்கவில்லை.

இந்துக்களின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். நாங்கள் இந்துக்கள்தான். ஆனால், ஒரு தந்தை தனது மகளின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய அனுமதிக்க முடியாது, உடலை எரியூட்ட அனுமதிக்க முடியாது என எங்கு எழுதப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மிகப்பெரிய அநீதி. அதிலும் இதை மாநில அரசு செய்தது மிகப்பெரிய அநீதியாகும் .

இவ்வாறு அவர் ஆவேசமாக கூறினார்.

இதனை தொடர்ந்து தடையை மீறி நடந்து சென்ற பிரியங்காந்தி, ராகுல்காந்தியை ஐபிசி 188 பிரிவின் கீழ் போலீசார் கைது செய்தனர். அப்போது ஹத்ரஸ் செல்லும் வழியில் போலீசார் தடுத்தபோது ராகுல் காந்தி நிலைதடுமாறி கீழே விழுந்தார்.  


Next Story