இந்திய-சீன ராணுவத்துக்கு இடையே அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் தீவிரம் - வெளியுறவு அமைச்சகம் தகவல்
இந்திய-சீன ராணுவத்துக்கு இடையே அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
லடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே 5 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர, இரு நாடுகள் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதில் கடந்த 21-ந்தேதி இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் எல்லையில் இரு தரப்பும் மேலும் படைகளை அனுப்பக்கூடாது என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக எல்லையில் இருந்து படைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக இரு தரப்பும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளன.
இருநாட்டு ராணுவத்துக்கு இடையே நடைபெறும் இந்த 7-வது சுற்று பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறுகையில், ‘ராணுவ அதிகாரிகள் இடையே கடந்த முறை நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டது போல, 7-வது சுற்று பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளில் இரு தரப்பும் ஈடுபட்டு உள்ளன. இதன் மூலம் ஏற்கனவே இருக்கும் ஒப்பந்தப்படியும், நடைமுறைப்படியும் எல்லையில் இருந்து விரைவாகவும், முற்றிலுமாகவும் படைகளை விலக்கவும், அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீண்டும் ஏற்படுத்தவும் முடியும்’ என்று தெரிவித்தார்.
இதற்கிடையே 71-வது நிறுவன தினத்தை நேற்று கொண்டாடிய சீனாவுக்கு மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story