2022-ம் ஆண்டில்தான், தரமான கொரோனா தடுப்பூசி கிடைக்கும்; நிபுணர்கள் கணிப்பு


2022-ம் ஆண்டில்தான், தரமான கொரோனா தடுப்பூசி கிடைக்கும்; நிபுணர்கள் கணிப்பு
x
தினத்தந்தி 3 Oct 2020 4:15 AM IST (Updated: 3 Oct 2020 12:52 AM IST)
t-max-icont-min-icon

2022-ம் ஆண்டில்தான் தரமான கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று தடுப்பூசி நிபுணர்கள் கணித்துள்ளனர்.

புதுடெல்லி,

கொரோனா தடுப்பூசி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் புழக்கத்துக்கு வரும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் ஏற்கனவே கூறியுள்ளார்.இந்நிலையில், அடுத்த ஆண்டிலும் தடுப்பூசி கிடைக்காது என்று தடுப்பூசி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 28 நிபுணர்களிடம் கனடாவில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கருத்து கேட்டறிந்து ஒரு ஆய்வு நடத்தினர். கடந்த ஜூன் மாதம் இந்த கருத்து கேட்பு நடந்தது.

இந்த நிபுணர்கள், தடுப்பூசி துறையில் சராசரியாக 25 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்கள் ஆவர். பெரும்பாலானவர்கள், கனடா மற்றும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். இந்த ஆய்வு முடிவுகள் குறித்து மெக்கில் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோனதன் கிம்மல்மேன் கூறியதாவது:-

அமெரிக்க அதிகாரிகள், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஆனால், இந்த நிபுணர்கள், அதை விட குறைவான நம்பிக்கையில் உள்ளனர்.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் தரமான தடுப்பூசி கிடைக்க வாய்ப்பில்லை என்று அவர்கள் கருதுகிறார்கள். 2022-ம் ஆண்டில்தான் மக்களுக்கு கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

தரமான தடுப்பூசி கிடைப்பதற்கு முன்பு, தடுப்பூசி பணிகளில் 2 முக்கிய பின்னடைவு ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அமெரிக்காவின் முதல் தடுப்பூசியின் தரம் குறித்து எதிர்மறையான எச்சரிக்கை வெளியாகும் என்று கருதுகிறார்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story