ஸ்வப்னா சுரேசுக்கு கமிஷனாக ரூ.3¾ கோடி வழங்கப்பட்டது -ஐகோர்ட்டில் கட்டுமான நிறுவனம் பரபரப்பு தகவல்
‘லைப் மிஷன்‘ திட்ட ஒப்பந்தத்திற்கு உதவியதற்காக ஸ்வப்னா சுரேசுக்கு ரூ.3¾ கோடி கமிஷனாக வழங்கப்பட்டது என கட்டுமான நிறுவனம் ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர். ஸ்வப்னா சுரேஷ் ஆளுங்கட்சிக்கு நெருக்கமாக இருந்ததால், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மந்திரி ஜலீல், முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் உள்பட பல முக்கிய பிரமுகர்களிடம் தங்கம் கடத்தல் சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியது.
இந்த பரபரப்புக்கு இடையே கேரள அரசின் ‘லைப் மிஷன்‘ திட்டமான ஏழைகளுக்கு வீடுகள் கட்டும் திட்டத்திலும் பெரும் மோசடி நடந்திருப்பதாகவும், அதில் ஸ்வப்னா சுரேசுக்கு தொடர்பு இருப்பதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
அதே சமயத்தில் தங்கம் கடத்தல் விவகாரத்தின் போது நடந்த விசாரணையில், லைப் மிஷன் திட்டத்துக்காக கொடுக்கப்பட்ட கமிஷன் தொகையை வங்கி லாக்கரில் வைத்திருந்ததாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே லைப் மிஷன் ஊழல் தொடர்பாக யுனிடெக் பில்டர்ஸ் உரிமையாளரான சந்தோஷ் ஈப்பனிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி யுனிடெக் பில்டர்ஸ் நிறுவனம் சார்பில் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவில், லைப் மிஷன் திட்ட ஒப்பந்தம் கிடைத்ததற்காக ஐக்கிய அரபு அமீரக தூதரகம் கேட்டு கொண்டதன் பேரில் 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ந் தேதி திருவனந்தபுரம் கவடியாரில் உள்ள கபே காபி டேயில் வைத்து, தூதரக நிதிப் பிரிவின் தலைவர் எகிப்து நாட்டை சேர்ந்த காலித் மூலமாக ரூ.3.80 கோடிக்கான தொகை அமெரிக்க டாலராக ஸ்வப்னா சுரேஷிடம் வழங்கப்பட்டது. மேலும் இந்த திட்ட செயல்பாடுகளில் இடைநிலையாளராக செயல்பட்டு வந்த சந்தீப்நாயருக்கு ரூ.68 லட்சம் அவரது கம்பெனி பெயருக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டது.
அது மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் நடந்த தேசிய விழாவில் கலந்து கொண்ட ரமேஷ் சென்னித்தலா உள்பட 5 முக்கிய பிரமுகர்களுக்கு தலா ரூ.49,900 மதிப்பிலான ஐ-போன் கொடுத்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா மறுத்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், நான் யாரிடம் இருந்தும் ஐ-போன் பெறவில்லை. அப்போது நடந்த விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு குலுக்கல் மூலம் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலிகளுக்கு தூதரகம் கேட்டு கொண்டதன் பேரில் பரிசுகளை வழங்கினேன். எனக்கு எதிரான இந்த பொய் குற்றச்சாட்டு களுக்கு எதிராக வழக்கு தொடர இருக்கிறேன் என்றார்.
Related Tags :
Next Story