ராகுல் காந்தி அரசியலுக்காகவே ஹத்ராஸ் வருகிறார்-மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சனம்


ராகுல் காந்தி அரசியலுக்காகவே ஹத்ராஸ் வருகிறார்-மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சனம்
x
தினத்தந்தி 3 Oct 2020 1:21 PM IST (Updated: 3 Oct 2020 1:44 PM IST)
t-max-icont-min-icon

ராகுல் காந்தி அரசியலுக்காவே ஹத்ராஸ் வருகிறார் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான ஒரு தலித் இளம்பெண், சமீபத்தில் உயர்சாதி வாலிபர்கள் 4 பேரால்  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.  இளம் பெண்ணின்  உடலையும் போலீசார் அவசர அவசரமாக தகனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பம்  உத்தரபிரதேசம் மட்டுமின்றி, நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்தால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமும், பரபரப்பும் நிலவி வருகிறது.

இந்த கொடூரமான சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெரிய போராட்டங்கள் வெடித்தன. தேசிய தலைநகரில் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.  பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வதேரா ஆகியோரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். போலீசாரால் ராகுல் காந்தி தள்ளிவிடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ஊடகங்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் உத்தர பிரதேச போலீசார் அனுமதி மறுத்துவருகின்றனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பாதிப்புக்கு உள்ளான பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க இன்று மீண்டும் ஹத்ராஸ் செல்ல இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்கள் குழுவுடன் தான் செல்ல இருப்பதாகவும், ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினரை தான் சந்திப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என ராகுல் காந்தி கூறியுள்ளார். ராகுல் காந்தி வருகை தருவதாக கூறியுள்ளதால், உத்தரபிரதேச நொய்டா எக்ஸ்பிரஸ் சாலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில்,  மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தியை கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து ஸ்மிரிதி இராணி கூறும் போது, “ காங்கிரசின் தந்திரங்களை மக்கள் நன்கு அறிந்துள்ளனர். இதன்காரணமாகவே 2019-ல் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பாஜகவுக்கு மக்கள் வழங்கினர்.  ராகுல் காந்தியின் ஹத்ராஸ் பயணம் நீதிக்காக அல்ல. அரசியலுக்காகவே என்பதை மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர்” என்றார். 

Next Story