போலீஸ் லத்தியடியில் இருந்து தொண்டர்களை காக்க தடுப்பு சுவரை ஏறி குதித்த பிரியங்கா காந்தி!


போலீஸ் லத்தியடியில் இருந்து தொண்டர்களை காக்க தடுப்பு சுவரை ஏறி குதித்த பிரியங்கா காந்தி!
x
தினத்தந்தி 3 Oct 2020 9:28 PM IST (Updated: 3 Oct 2020 9:28 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ் லத்தியடியில் இருந்து தொண்டர்களை காக்க பிரியங்கா காந்தி தடுப்பு சுவரை ஏறி குதித்துள்ளார்.இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லக்னோ,

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்தரஸ் நகரைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த மாதம் 14-ம் தேதி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்தப் பெண் சிகிச்சைக்காக டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹாத்தரஸுக்கு இரவோடு இரவாகக் கொண்டு வந்த போலீசார், புதன்கிழமை அதிகாலை தகனம் செய்தனர். இளம்பெண் உயிரிழந்து 3 நாட்கள் ஆகியும் இதன் பாதிப்பும் தாக்கமும் மக்களை விட்டு இன்னும் விலகவில்லை. இந்த கொடூரமான சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெரிய போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்தநிலையில் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட ஹாத்தரஸ் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் முடிவு செய்து வியாழக்கிழமை ஹாத்தரஸ் செல்ல முயன்றனர்.

ஆனால், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை போலீசார் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ராகுல் காந்தி கீழே தள்ளப்பட்டார்.

அதன்பின் ராகுல், பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் பிரமுகர்களை போலீசார் கைது செய்து சில மணி நேரத்துக்குப் பின் விடுவித்தனர். ராகுல்காந்தி கைது சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடுமுழுவதும் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை நான் சந்திப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி டுவீட் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று மீண்டும் ஹாத்தரஸ் நகருக்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் புறப்பட்டனர். பிரியங்கா காந்தி காரை ஓட்ட, அருகே ராகுல் காந்தி அமர்ந்திருந்தார். மற்றொரு சிறிய பேருந்தில் சமூக விலகலைக் கடைப்பிடித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் சென்றனர்.

ராகுல், பிரியங்கா வருகையைத் தடுக்கும் பொருட்டு கவுதம் புத்தாநகர் மாவட்டத்தில் உள்ள டெல்லி- நொய்டா நெடுஞ்சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. உ.பி. மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் அனைவரும் நொய்டா நெடுஞ்சாலையில் குவிக்கப்பட்டனர்.

கவுதம் புத்தாநகர் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவையும் மாவட்ட நிர்வாகம் பிறப்பித்தது. எல்லைகள் சீல் வைக்கப்படவில்லை என்றாலும் வாகனங்கள் கடுமையான ஆய்வுக்குப் பின்பே அனுப்பப்பட்டன.

டெல்லி-நொய்டா நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் கார், காங்கிரஸ் எம்.பி.க்களின் சிறிய பேருந்து வந்ததும் அதை போலீசார் தடுத்து நிறுத்தினர்.  இதனால் அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ், தொண்டர்கள் மீது லத்தியடி நடத்தினர்.

இதைப்பார்த்த பிரியங்கா காந்தி, உடனடியாக அங்கிருந்த தடுப்பு சுவரை ஏறி குதித்து தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தார். இதுகுறித்து வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதனைதொடர்ந்து  உள்துறை அமைச்சகம் சார்பில் விடுத்த அறிவிப்பில் 5 பேர் மட்டும் ஹாத்தரஸ் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்கலாம் என்று கூறப்பட்டது. இதையடுத்து, இந்தத் தகவலை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியிடம் போலீசார் கூறினர். இதைத் தொடர்ந்து மற்றொரு காரில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரசார் 5 பேர் ஹாத்தரஸ் நகருக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றனர்.

Next Story