மணாலி-லே இடையேயான பயண நேரத்தை 5 மணி நேரம் குறைக்கும் அடல் சுரங்கப்பாதை
இமாசல பிரதேசத்தில் நேற்று பிரதமர் மோடி திறந்து வைத்த அடல் சுரங்கப்பாதையால் மணாலி-லே இடையேயான பயண நேரம் 5 மணி வரை குறையும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
ரோதங்,
இமாசல பிரதேசத்தின் லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கு பகுதி பனிப்பொழிவு காலங்களில் 6 மாதங்களுக்கு மேல் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படுவதால் மணாலி- லஹால்-ஸ்பிடி இடையே உலகிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டது.
ஆண்டு முழுவதும் அனைத்து விதமான காலநிலையிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டு உள்ள இந்த சுரங்கப்பாதை கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் மீட்டர் (10 ஆயிரம் அடி) உயரத்தில் இமயமலையின் பிர் பஞ்சால் மலைத்தொடரை குடைந்து உருவாக்கப்பட்டு உள்ளது.
9.02 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த சுரங்கப்பாதை உலகிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை என்ற சிறப்பை பெற்று உள்ளது. இந்த சுரங்கப்பாதையால் மணாலி-லே இடையேயான தூரம் 46 கி.மீ. அளவுக்கு குறைவதுடன், பயண நேரமும் 5 மணி வரை குறையும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
அடல் சுரங்கப்பாதையின் தெற்கு முனை மணாலியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் 3,060 மீட்டர் உயரத்தில் உள்ளது. வடக்கு முனை லஹால் பள்ளத்தாக்கின் சிஸ்சு அருகே தெலிங் கிராமத்தில் 3,071 மீட்டர் உயரத்தில் உள்ளது.
குதிரை காலணி வடிவில் அமைக்கப்பட்டு உள்ள இந்த சுரங்கப்பாதை இருவழி சாலையை கொண்டது. இது 8.கி.மீ. தூர சாலையையும், 5.525 மீட்டர் மேல்நிலை இடைவெளியையும் கொண்டுள்ளது.
மிகவும் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையில் ஒவ்வொரு 150 மீட்டருக்கும் தொலைபேசி வசதி, ஒவ்வொரு 60 மீட்டருக்கும் தீயணைப்பு வசதி, ஒவ்வொரு 500 மீட்டருக்கும் அவசரகால வெளியேறும் வழி, ஒவ்வொரு 2.2 கி.மீட்டருக்கும் ஒரு வளைவு, ஒவ்வொரு கி.மீ.க்கும் காற்றின் தரமதிப்பீடு போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
மேலும் முன்னெச்சரிக்கை அமைப்புகள், கண்காணிப்பு கேமராவுடன் கூடிய தானியங்கி விபத்து கண்டறிதல் அமைப்பு போன்றவை ஒவ்வொரு 250 மீட்டருக்கும் பொருத்தப்பட்டிருக்கும்.
மிகவும் கடினமான காலநிலை மற்றும் கரடு முரடான மலைத்தொடரில் அமைக்கப்பட்டு உள்ள சுரங்கப்பாதையை எல்லை சாலை அமைப்பினர் அயராது பாடுபட்டு அமைத்து உள்ளனர். இந்த திட்டத்தின் மொத்த செலவு ரூ.3,300 கோடி ஆகும்.
இமாசல பிரதேச மக்களுக்கும், எல்லையோர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள ராணுவத்துக்கும் மிகுந்த உதவிகரமாக அமைந்துள்ள இந்த சுரங்கப்பாதைக்கான யோசனையை லஹால் பள்ளத்தாக்கை சேர்ந்த தனது நண்பரான அர்ஜுன் கோபால் என்பவரிடம் இருந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெற்றதாக இமாசல பிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் தெரிவித்தார்.
1942-ம் ஆண்டு குஜராத்தின் வதோதராவில் நடந்த ஆர்.எஸ்.எஸ்.சின் பயிற்சி முகாமில் பங்கேற்றபோது வாஜ்பாயும், அர்ஜுன் கோபாலும் நண்பரானார்கள். அர்ஜுன் கோபால் கடந்த 2008-ம் ஆண்டு மரணமடைந்த நிலையில், அவரது மகன்களான அமர் சிங், ராம்தேவ் ஆகிய இருவரும் நேற்றைய திறப்பு விழாவில் பங்கேற்றனர்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கடந்த 1998-ம் ஆண்டு டெல்லியில் அவரை சந்தித்து, லஹால்-ஸ்பிடி மாவட்ட மக்களின் பயன்பாட்டுக்காக ரோதங் மலைத்தொடரில் சுரங்கப்பாதை உருவாக்குமாறு அர்ஜுன் கோபால் கேட்டுக்கொண்டதாக அவரது மகன் அமர்சிங் (வயது 75) நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
வாஜ்பாயிடம் அர்ஜுன் போல் சமர்ப்பித்த கோரிக்கையை அவர் ராணுவம், நிதி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகங்களுக்கு அனுப்பியதாக கூறிய அமர்சிங், ராணுவ அமைச்சகம் முதலில் அதிருப்தி தெரிவித்தாலும் பின்னர் சுரங்கப்பாதைக்கு ஒப்புதல் அளித்ததாகவும் தெரிவித்தார்.
இந்த சுரங்கப்பாதை திறக்கப்பட்டதன் மூலம் வாஜ்பாயின் நண்பரின் நீண்டகால கனவு நனவாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ரோதங் சுரங்கப்பாதை என பெயரிடப்பட்டு இருந்த இந்த சுரங்கப்பாதைக்கு, வாஜ்பாயின் நினைவாக அடல் சுரங்கப்பாதை என பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story