நாட்டில் சர்வாதிகாரம் நடக்கிறது; ‘தாழ்த்தப்பட்டோர் அதிகளவில் சித்ரவதைக்கு ஆளாகிறார்கள்’: மம்தா ஆவேசம்


நாட்டில் சர்வாதிகாரம் நடக்கிறது; ‘தாழ்த்தப்பட்டோர் அதிகளவில் சித்ரவதைக்கு ஆளாகிறார்கள்’:  மம்தா ஆவேசம்
x
தினத்தந்தி 4 Oct 2020 4:01 AM IST (Updated: 4 Oct 2020 4:01 AM IST)
t-max-icont-min-icon

நாட்டில் சர்வாதிகாரம் நடக்கிறது. தாழ்த்தப்பட்டோர் அதிகளவில் சித்ரவதைக்கு ஆளாகிறார்கள் என்று மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறினார்.

கொல்கத்தா,

உத்தரபிரதேச மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், உயர்சாதி வாலிபர்கள் 4 பேரால் கூட்டு பலாத்காரம் செய்து, சித்ரவதைக்கும் ஆளான நிலையில் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக பல இடங்களிலும் கண்டன போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்த கொடூர சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் நேற்று மாலை கண்டன பேரணி நடத்தினார். பிர்லா கோளரங்கத்துக்கும், மேயோ ரோடு காந்தி சிலைக்கும் இடையே 2 கி.மீ. தொலைவுக்கு இந்த பேரணி நடந்தது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடந்த மார்ச் 25-ந் தேதி நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, பொது முடக்கத்துக்கு பின்னர் மம்தா பானர்ஜி நடத்திய முதல் பேரணி இதுதான்.

இந்த பேரணியில் மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பெருந்தொற்று இல்லை. பா.ஜ.க. தான் பெருந்தொற்று. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக நடத்தப்படுகிற அட்டூழியங்கள்தான் மிகப்பெரிய தொற்று நோய் ஆகும்.

நாம் இந்த அட்டூழியங்களுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இப்படிப்பட்ட அட்டூழியங்கள் நடப்பது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல.

நாடு முழுவதும் சர்வாதிகாரம் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு மக்களுக்கான அரசாக இல்லாமல், மக்களுக்கு எதிரான அரசாக, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான அரசாக, விவசாயிகளுக்கு எதிரான அரசாக செயல்படுகிறது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால்தான் இது, சமூக தொற்றாக மாறி உள்ளது. ஏனென்றால் வெளியே செல்லாமல் பாதுகாக்கப்பட்ட இடங்களில் இருக்கிறவர்களுக் கும் தொற்று ஏற்படுகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story