ஒலியைவிட வேகமாக சென்று எதிரியின் இலக்கை அழிக்கும் அதிநவீன அணு ஏவுகணை சோதனை வெற்றி


ஒலியைவிட வேகமாக சென்று எதிரியின் இலக்கை அழிக்கும் அதிநவீன அணு ஏவுகணை சோதனை வெற்றி
x
தினத்தந்தி 4 Oct 2020 4:20 AM IST (Updated: 4 Oct 2020 4:20 AM IST)
t-max-icont-min-icon

ஒடிசாவில் இந்தியா நடத்திய சவுரியா அதிநவீன அணு ஏவுகணை சோதனை வெற்றி பெற்றிருக்கிறது. இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு, ஒலியை விட வேகமாக சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது.

பாலசோர்,

இந்தியாவில் டி.ஆர்.டி.ஓ. என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு கே-15 சாகரிகா ஏவுகணையை முற்றிலும் உள்நாட்டு தயாரிப்பாக உருவாக்கி உள்ளது. இந்த ஏவுகணை நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவத்தக்க அணு ஏவுகணை ஆகும். இந்த ஏவுகணை ஏற்கனவே சேவையில் உள்ளது.

இந்த நிலையில், அணு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு தரையில் இருந்து புறப்பட்டு 700 கி.மீ. முதல் 1,000 கி.மீ. வரையில் சென்று தரையில் உள்ள எதிரியின் இலக்கை அழிக்கும் வகையில் கே-15 சாகரிகா ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மேம்படுத்தி உள்ளது. இந்த ஏவுகணை சவுரியா என அழைக் கப்படுகிறது. இது ஒலியைவிட வேகமாக சென்று எதிரியின் இலக்கை அழிக்கும்.

இது ஒரு டன் வரையிலான எடைகொண்ட அணு ஆயுதங்களையோ, வெடிபொருட்களையோ சுமந்து கொண்டு செல்லும் வல்லமை மிக்கதாகும். இது 10 மீட்டர் நீளமும், 74 செ.மீ. விட்டமும், 6.2 டன் எடையும் கொண்டதாகும். இதை இயக்குவது எளிது.

இந்த ஏவுகணை, ஒடிசா மாநிலத்தில் உள்ள ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தீவில் உள்ள ஏவுதள வளாகத்தில் இருந்து நேற்று மதியம் 12.10 மணிக்கு ஏவி சோதிக்கப்பட்டது.

இந்த ஏவுகணை, வங்காள விரிகுடா கடலில் நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை மிகத்துல்லியமாகவும், வெற்றிகரமாகவும் தாக்கியது. இதனால் இந்த சோதனை வெற்றி கண்டுள்ளதாக டி.ஆர்.டி.ஓ. வட்டாரங்கள் கூறின.

இந்த ஏவுகணையின் பயணத்தின்போது, பல்வேறு டெலிமெட்ரி நிலையங்கள் மற்றும் ரேடார்கள் மூலம் கண்காணிக்கப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சவுரியா அணு ஏவுகணையை, அதன் உயர் செயல்திறன், வழிசெலுத்தல் மற்றும் வழிகாட்டுதல் அமைப்புகள், திறமையான உந்துவிசை அமைப்புகள், அதிநவீன கட்டுப்பாட்டு தொழில் நுட்பங்கள் போன்றவற்றால் உலகின் தலைசிறந்த 10 ஏவுகணைகளில் ஒன்றாக டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.

இந்த ஏவுகணையின் மிக முக்கிய அம்சம், இது எதிரிகளால் கண்டுபிடிக்க முடியாத இடங்களில் வைக்க முடியும், செயற்கைக்கோளால்கூட இதை படம் பிடித்து பார்த்து விட முடியாது என்பதாகும்.

Next Story