பெங்களூரு சிட்டி- நிஜாமுதீன் இடையே ஓடும் கிஷன் ரெயில், ஆதர்ஷ் நகர் வரை நீட்டிப்பு - தென்மேற்கு ரெயில்வே தகவல்


பெங்களூரு சிட்டி- நிஜாமுதீன் இடையே ஓடும் கிஷன் ரெயில், ஆதர்ஷ் நகர் வரை நீட்டிப்பு - தென்மேற்கு ரெயில்வே தகவல்
x
தினத்தந்தி 4 Oct 2020 1:55 PM IST (Updated: 4 Oct 2020 1:55 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு சிட்டி- நிஜாமுதீன் இடையே ஓடும் கிஷன் ரெயில், ஆதர்ஷ்நகர் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு, 

பெங்களூரு சிட்டி- நிஜாமுதீன் இடையே ஓடும் கிஷன் ரெயில், ஆதர்ஷ்நகர் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லி நிஜாமுதீனுக்கு காய்கறிகள், பழங்களை ஏற்றி செல்லும் கிஷன் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் சேவையை ஆதர்ஷ் நகர் வரை நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்படி பெங்களூருவில் இருந்து வருகிற 10 மற்றும் 17-ந் தேதிகளில் சனிக்கிழமைகள் அன்று மாலை 4.45 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் கிஷன் ரெயில்(வண்டி எண்:-06525) செவ்வாய்கிழமைகளில் மதியம் 1.30 மணிக்கு ஆதர்ஷ்நகரை சென்றடையும்.

மறுமார்க்கமாக வருகிற 6, 13 மற்றும் 20-ந் தேதிகளில் செவ்வாய்கிழமைகள் அன்று ஆதர்ஷ் நகரில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படும் கிஷன் ரெயில்(வண்டி எண்:-06526), ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.45 மணிக்கு பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரெயில்கள் இருமார்க்கமாக மைசூரு, ஹாசன், அரிசிகெரே, தாவணகெரே, உப்பள்ளி, லோண்டா, பெலகாவி, மீரஜ், சங்கோலா, குருத்வாடி, தவுனட், மன்மத், புஷ்வல், இடர்சி, போபால், ஜான்சி, ஆக்ரோ கண்டோன்மெண்ட், மதுரா, நிஜாமுதீன் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதுபோல பயணிகளின் போதிய வருகை இல்லாததால் பெங்களூரு சிட்டி-மங்களூரு சென்டிரல் இடையே இருமார்க்கமாக இயங்கும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்(வண்டி எண்:-06515/06516) சேவை வருகிற 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 5 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது. இதுபோல பெங்களூரு சிட்டி-மைசூரு இடையே இருமார்க்கமாக இயங்கும் ரெயில்கள்(வண்டி எண்:-06539/06540) சேவை 7-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 6 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் பெங்களூரு சிட்டி-மங்களூரு சென்டிரல் இடையே வாரத்திற்கு புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும் ரெயில்(வண்டி எண்:-06517) 7-ந் தேதி முதல் ஞாயிறு, திங்கள், செவ்வாய்கிழமைகளில் இயங்கும். மறுமார்க்கமாக மங்களூரு சென்டிரலில் இருந்து பெங்களூரு சிட்டி வரை வாரத்தில் வியாழன், சனி, திங்கட்கிழமைகளில் இயங்கும் ரெயில்(வண்டி எண்:-06518) வருகிற 8-ந் தேதி முதல் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் இயங்கும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

Next Story