காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் வேளாண் சட்டங்கள் குப்பைத்தொட்டிக்கு அனுப்பப்படும்; ராகுல் காந்தி உறுதி
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும், வேளாண் சட்டங்கள் குப்பைத்தொட்டிக்கு அனுப்பப்படும் என ராகுல் காந்தி உறுதிபட தெரிவித்தார்.
மோகா,
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது.
இந்த 3 வேளாண் மசோதாக்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அவை சட்டமாகி உள்ளன.
இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட அம்சங்கள் அனைத்தும் பாதிக்கப்படும் எனவும், பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் விவசாயம் சென்றுவிடும் எனவும் விவசாயிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.
இதனால் இந்த சட்டங்களுக்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக பஞ்சாப், அரியானாவில் விவசாயிகள் தீவிர போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த மாநிலங்களில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
முன்னதாக இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த சிரோமணி அகாலிதளத்தை சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல், தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜனதா கூட்டணியில் இருந்தும் அந்த கட்சி விலகியது.
இதைப்போல காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் இந்த வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த கட்சிகள் சார்பில் தொடர்ந்து போராட்டங்களும் நடந்து வருகின்றன.
ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலை முறை தொடர்ந்து இருக்கும் என விளக்கம் அளித்த மத்திய அரசு, இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றன என கூறியது. வேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடியும் குறைகூறி வருகிறார்.
வேளாண் சட்டங்களை தொடக்கம் முதலே எதிர்த்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, இது தொடர்பாக மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்த சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
அந்தவகையில் காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் நேற்று முதல் நாளை வரை 3 நாட்களுக்கு டிராக்டர் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த பேரணியை ராகுல் காந்தி தலைமையேற்று நடத்தினார்.
இதற்காக நேற்று அவர் பஞ்சாபின் மோகாவுக்கு சென்றார். அங்கு அவர் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். அப்போது அவர் வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு மீது கடுமையாக குற்றம் சாட்டினார். அப்போது அவர் கூறியதாவது:-
வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நல்வாழ்வை கொடுக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். அவ்வாறு விவசாயிகளின் நலனுக்காக இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருந்தால், ஏன் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இந்த மசோதாக்கள் மீது நீங்கள் விவாதம் நடத்தவில்லை? இந்த சட்டங்களால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தால், ஏன் அவர்கள் நாடு முழுவதும் போராடுகிறார்கள். ஏன் பஞ்சாபின் ஒவ்வொரு விவசாயியும் போராடுகிறார்? நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், இந்த சட்டங்களை அமல்படுத்த வேண்டியதன் அவசரம் என்ன?
கடந்த 6 ஆண்டுகளாக பிரதமர் மோடி பொய் கூறி வருகிறார். பணமதிப்பு நீக்கத்தை கொண்டு வந்தபோது, அதன்மூலம் கருப்பு பணம் ஒழியும் எனக்கூறினார். சிறிய கடைக்காரர்கள், வர்த்தகர்கள் மற்றும் ஏழைகளை ஜி.எஸ்.டி. பாதித்தது. தற்போது கொரோனா பரவி வரும் நிலையில், பெரிய நிறுவனங்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஏழைகள், விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை.
வேளாண் சட்டங்கள் விவகாரத்திலும் குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக விவசாயிகளை மத்திய அரசு அழிக்கிறது. அதானி மற்றும் அம்பானிகளின் கைப்பாவையாகவே மத்திய அரசு செயல்படுகிறது. குறைந்தபட்சஆதரவு விலை மற்றும்உணவுப்பொருள் கொள்முதல் அமைப்பை நீக்குவதே அவர்களது இலக்கு. இதன் மூலம் பஞ்சாப் மற்றும் அரியானா விவசாயிகளின் கதை முடிந்துவிடும் என்பது அவர்களுக்கு தெரியும்.
ஆனால் காங்கிரஸ் கட்சி இதை நடக்க விடாது. உங்கள் பின்னால் நாங்கள் வலுவாக நிற்போம். ஒரு அங்குலம் கூட நகரமாட்டோம். மத்தியில் காங்கிரஸ் அரசு அமையும் நாளில் இந்த 3 கருப்பு சட்டங்களும் நீக்கப்படும். அவை குப்பைத்தொட்டிக்கு அனுப்பப்படும் என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
இந்த அமைப்பில் குறைபாடு இல்லை என நான் ஒருபோதும் கூறவில்லை. அமைப்பில் ஒரு சீர்திருத்தம் தேவையாகவே இருக்கிறது. அதற்காக அதை முற்றிலும் அழிப்பது தேவையற்றது. நீங்கள் அவ்வாறு செய்தால், பின்னர் விவசாயிகளின் பாதுகாப்புக்கு எதுவும் மிஞ்சாது. அவர்கள் அம்பானி, அதானியிடம் நேரடியாகத்தான் பேச வேண்டியிருக்கும். விவசாயிகள் அழிக்கப்படுவார்கள். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
இந்த கூட்டத்தில் மாநில முதல்-மந்திரி அமரீந்தர் சிங், நிதி மந்திரி மன்பிரீத் சிங் பாதல், மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர், கட்சியின் பஞ்சாப் மாநில பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர். கடந்த சில நாட்களாக கட்சியின் செயல்பாடுகளில் இருந்து விலகியிருந்து வரும் முன்னாள் மந்திரியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்துவும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.
பின்னர் வேளாண் சட்டங்களை எதிர்த்து ராகுல் காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி நடந்தது. இதில் ஒரு டிராக்டரில் ராகுல் காந்தி மற்றும் அமரீந்தர் சிங் அமர, மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் அந்த டிராக்டரை ஓட்டிச்சென்றார். இந்த பேரணி மோகா, லூதியானா போன்ற மாவட்டங்கள் வழியாக நடந்தது.
Related Tags :
Next Story