கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் வீட்டில் சிபிஐ சோதனை; ரூ. 50 லட்சம் ரொக்கம் பறிமுதல்
கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. அதில் ரூ. 50 லட்சம் ரொக்கம் கைப்பற்றினர்.
பெங்களூரு:
கர்நாடகாவில் இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் அவரது சகோதரர் பெங்களூரு கிராமப்புற மக்களவை எம்.பி., டி.கே.சுரேஷ் ஆகியோரின் வீடுகள் மற்றும் மற்றும் தொடர்புடைய 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
சிவகுமாரின் வீட்டில் நடந்த சோதனையின்போது கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியதாக ஜி நியூஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சோதனைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
அதிகாலை 6 மணியளவில் சிபிஐ அதிகாரிகள் சோதனைகளை தொடங்கினர். இது குறித்த செய்தி பரவியதால், ஏராளமான ஆதரவாளர்கள் சிவக்குமார் வீட்டின் முன் கூடி உள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பரில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமாருக்கு எதிராக வருமான வரித்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் அமலாக்க இயக்குநரகம் அவரை கைது செய்தது. கணக்கில் காட்டப்படாத பணத்தை ஹவாலா மூலம் திரட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) கீழ், சிவகுமார் மீது வரி ஏய்ப்பு மற்றும் கோடி ரூபாய் மதிப்புள்ள `ஹவாலா` பரிவர்த்தனை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story