சாத்தான்குளம், ஹத்ராஸ் சம்பவங்களால் போலீஸ் சீர்திருத்தங்கள் அவசியம்; பல்வேறு துறை நிபுணர்கள் கருத்து


சாத்தான்குளம், ஹத்ராஸ் சம்பவங்களால் போலீஸ் சீர்திருத்தங்கள் அவசியம்; பல்வேறு துறை நிபுணர்கள் கருத்து
x
தினத்தந்தி 6 Oct 2020 4:37 AM IST (Updated: 6 Oct 2020 4:37 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் சம்பவம், ஹத்ராஸ் இளம்பெண் கூட்டு பலாத்காரம் போன்ற சம்பவங்கள், போலீஸ் துறையில் உடனடியாக சீர்திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன என்று பல்வேறு துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் சிந்தனையாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் பல்வேறு துறை நிபுணர்கள் பங்கேற்றனர்.

அவர்கள் போலீஸ் துறையில் அவசரமாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். அவர்கள் கூறியதாவது:-

சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம், நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை, ஹத்ராஸ் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு பலியான சம்பவம் உள்ளிட்ட சம்பவங்கள், போலீஸ்துறை செயல்பாட்டின் குறைபாடுகளை பிரதிபலிக்கின்றன.

அதனால், போலீஸ் துறையில் அவசரமாக சீர்திருத்தங்கள் மேற்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. இந்த சீர்திருத்தங்கள் தாமதம் ஆக ஆக, அப்பாவிகள் பலியாவது அதிகரித்து வருகிறது.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

குறிப்பாக, சமூகவியல் நிபுணர் ரமேஷ் விர்மனி கூறியதாவது:-

சாத்தான்குளம், ஹத்ராஸ் சம்பவங்களை தவிர, நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்திலும் நிறைய கேள்விகள் எழுகின்றன. அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்பதை எய்ம்ஸ் அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது.

அப்படியானால், தற்கொலைக்கு தூண்டப்பட்டதாக சி.பி.ஐ. மேற்கொண்ட விசாரணை, உள்நோக்கம் கொண்டதாக அமைகிறது. நடிகை ரியா மீது போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளும் சந்தேகத்தை எழுப்புகிறது.

ஹத்ராஸ் இளம்பெண் விவகாரத்தில், போலீசார் நடந்து கொண்ட விதம் கண்டனத்துக்கு உரியது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட போலீசாரை இடைநீக்கம் செய்ததால், போலீசாரின் தவறை மாநில அரசு ஒப்புக்கொண்டதாக தோன்றுகிறது. ஆனால், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடப்பதை இது தடுக்குமா?

இவையெல்லாம் போலீஸ் கட்டமைப்பிலேயே உள்ள குறைபாடுகள். இவற்றை சரிசெய்ய போலீஸ் சீர்திருத்தங்கள் அவசியம். அதற்கு காலியாக உள்ள போலீஸ் பணியிடங்களை நிரப்புவதும், போலீசுக்கு செயல்பாட்டு சுதந்திரம் அளிப்பதும் முக்கியம்.

போலீஸ் துறை மீதான நிர்வாகத்தின் பிடியை தளர்த்த சுப்ரீம் கோர்ட்டு முயன்று வருகிறது. ஆனால் அதை அரசுகள் எதிர்த்து வருகின்றன. போலீஸ் நியமனத்திலும், இடமாற்றத்திலும் நியாயத்தை கடைப்பிடித்தால்தான், குற்றவியல் நீதி நடைமுறையை சரிசெய்ய முடியும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story