இந்தியாவில் ரஷிய தடுப்பூசி சோதனையில் தாமதம்; மீண்டும் விண்ணப்பிக்க மருந்து நிறுவனத்துக்கு அறிவுரை
இந்தியாவில் ரஷிய தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒப்புதல் பெற மீண்டும் விண்ணப்பிக்குமாறு பிரபல மருந்து நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தொற்று தடுப்புக்காக ரஷியா ‘ஸ்புட்னிக்-வி’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசிதான் கொரோனாவுக்கான உலகின் முதல் தடுப்பூசி என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தது நினைவுகூரத்தக்கது. இருப்பினும் இந்த தடுப்பூசி பற்றிய தகவல்களை ரஷியா, உலக சுகாதார நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளவில்லை; மருத்துவ பரிசோதனை பற்றிய தகவல்களும் வெளியாகவில்லை என சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில், தற்போது ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதல் இரு கட்ட மருத்துவ பரிசோதனை பற்றிய விவரங்களை ரஷியா, உலக சுகாதார நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதை உலக சுகாதார நிறுவனத்தின் மேற்கு பசிபிக் பிராந்திய அலுவலகத்தின் ஆலோசகர் டாக்டர் சோகோரோ எஸ்கலான்ட் உறுதி செய்துள்ளார்.
இதற்கு இடையே ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் 2 மற்றும் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனைகளை இந்தியாவில் நடத்துவதுடன், வினியோகம் செய்யவும் ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்துடன், ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் மருந்து நிறுவனம் கடந்த மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இதன்படி இந்தியாவில் உரிய ஒழுங்குமுறை ஒப்புதல் கிடைத்த உடன் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிசுக்கு ரஷிய நேரடி முதலீட்டு நிதியம், 10 கோடி தடுப்பூசி ‘டோஸ்’களை வினியோகம் செய்யும்.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் 2 மற்றும் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனைகளை இந்தியாவில் நடத்துவதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் கடந்த வாரம் விண்ணப்பம் செய்தது.
இதற்கிடையே, மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பில் (சி.டி.எஸ்.சி.ஓ.) உள்ள வல்லுனர் குழு (எஸ்.இ.சி.) நேற்று முன்தினம் கூடி, ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைக்கு ஒப்புதல் பெற டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் அளித்துள்ள விண்ணப்பத்தை ஆராய்ந்தது. அதன்பின்னர் 2-வது மற்றும் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையை ஒன்றாக நடத்துவதற்கு, மாற்றியமைக்கப்பட்ட நெறிமுறைகளுடன் ஒப்புதல் கேட்டு டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறி உள்ளது.
மேலும் சில கூடுதல் தகவல்களை தெரிவிக்குமாறும் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறும்போது, “இதன் அர்த்தம், டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதுதான். வல்லுனர் குழுவின் அறிவுறுத்தல்படி, 2-வது மற்றும் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையை ஒன்றிணைத்து நடத்த வேண்டுமே ஒழிய, இந்தியாவில் நேரடியாக 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்த முடியாது” என குறிப்பிட்டன.
எனவே இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், ரஷியாவில் இந்த தடுப்பூசியை 40 ஆயிரம் பேருக்கு செலுத்தி சோதிக்கும் 3-ம் கட்ட பரிசோதனை கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story