கொரோனா தடுப்பூசியை சேமிக்க குளிரூட்டும் வசதி அதிகம் தேவை நிபுணர்கள் கருத்து


கொரோனா தடுப்பூசியை சேமிக்க குளிரூட்டும் வசதி அதிகம் தேவை நிபுணர்கள் கருத்து
x
தினத்தந்தி 9 Oct 2020 4:15 AM IST (Updated: 9 Oct 2020 4:08 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசிகளை சேமித்து வைக்க குளிரூட்டும் வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று நிபுணர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

சில கொரோனா தடுப்பூசிகள், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் புழக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை எதிர்பார்த்து, இந்தியாவுக்கு 40 கோடி முதல் 50 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி கிடைக்கும் என்றும், அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் 25 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

அதே சமயத்தில், தடுப்பூசியை பாதுகாப்பாக சேமித்து வைக்க குளிரூட்டும் வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று நிபுணர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

பெரும் சவால்

இதுகுறித்து டெல்லியில் உள்ள தேசிய தடுப்பூசி நிறுவனத்தின் இயக்குனர் சத்யஜித்ரே கூறியதாவது:-

இப்போது தயாராகி வரும் சில தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைத்திருக்க அதிகமான குளிரூட்டும் வசதிகள் தேவைப்படும். இதை அமல்படுத்துவது இந்தியாவுக்கு பெரும் சவால்தான்.

இந்த தடுப்பூசிகளை மிகக்குறைவான வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும். அதிக அளவிலான தடுப்பூசிகளுக்கு இந்த வெப்பநிலையை பராமரிப்பது இயலாத காரியம். தடுப்பூசிகள், சந்தைக்கு வரும்போதுதான் உண்மையான பிரச்சினைகள் உருவெடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வீரியம் போய்விடும்

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிலையத்தின் பேராசிரியர் ராகவன் வரதராஜன் கூறியதாவது:-

மற்ற மருந்துகளை போலின்றி, கொரோனா தடுப்பூசிகளை 2 டிகிரி முதல்8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குள் வைத்திருக்க வேண்டும். ஏராளமான தடுப்பூசிகளை இதே வெப்பநிலைக்குள் வைத்திருப்பது சிரமம்தான்.

அதிக வெப்பநிலையில் வைத்திருந்தால், தடுப்பூசியின் வீரியம் போய்விடும். மறுபடியும் குளிரூட்டினாலும் பலன் இருக்காது. ஆகவே, தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு, குளிரூட்டும் வசதிகளை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

2 டிகிரி செல்சியஸ்

இந்திய தேசிய குளிரூட்டும் மைய தலைமை செயல் அதிகாரி பவனேஷ் கோலி கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசிகளை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குள் வைத்திருக்க வேண்டும். அவற்றை வினியோகிக்கும் முன்பு, போக்குவரத்தின்போதும், சேமித்து வைத்திருக்கும்போதும் இந்த வெப்பநிலையே நீடிக்க வேண்டும்.

இந்தியாவில் தற்போது 27 ஆயிரம் குளிரூட்டும் மையங்கள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story