கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை மோடி தொடங்கினார் பிரதமரின் 3 மந்திரங்களை பின்பற்ற அமித்ஷா வேண்டுகோள்


கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை மோடி தொடங்கினார் பிரதமரின் 3 மந்திரங்களை பின்பற்ற அமித்ஷா வேண்டுகோள்
x
தினத்தந்தி 9 Oct 2020 4:23 AM IST (Updated: 9 Oct 2020 4:23 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கினார். அவரது 3 மந்திரங்களை மக்கள் பின்பற்ற அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பெருந்தொற்று, இந்தியாவில் தன் ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தி வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது.

இந்தக்கூட்டத்தில், கொரோனா வைரஸ் பெருந்தொற்றை தடுப்பதற்காக முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, கைகளை கழுவுவது ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக பிரசார இயக்கம் நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான போரில் மக்கள் பங்கேற்பை ஊக்குவிப்பதுதான் இதன் நோக்கம் ஆகும்.

பிரசாரத்தின் சிறப்பம்சங்கள், அதிகளவில் பாதிப்புக்குள்ளான பிராந்தியங்கள், மாவட்டங்களை இலக்காக வைத்து பிரசாரம் செய்தல், ஒவ்வொருவரையும் சென்றடையத்தக்க வகையில் எளிய மற்றும் புரிந்து கொள்ளக்கூடிய செய்திகள் விடுத்தல், அனைத்து ஊடக தளங்களையும் பயன்படுத்தி நாடு முழுவதும் விழிப்புணர்வை பரப்புதல், பொது இடங்களில் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் வைத்தல் உள்ளிட்டவை அடங்கும்.

இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போர் மக்களால் இயக்கப்படுகிறது. நமது கொரோனா வீரர்களிடம் இருந்து பெரும்பலத்தை பெறுகிறது. நமது கூட்டு முயற்சிகள், பல உயிர்களை காப்பாற்ற உதவி உள்ளன. நாம் இந்த வேகத்தை தொடர வேண்டும். நமது மக்களை வைரசிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்.

முக கவசம் அணிவோம். கைகளை சுத்தமாக கழுவுவோம். தனிமனித இடைவெளியை பின்பற்றுவோம். நாம் அனைரும் ஒன்றுபட்டு வெற்றிபெறுவோம். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் பிரதமர் மோடியின் பிரசார இயக்கத்தில் சேரவும் அவர் அளித்த 3 மந்திரங்களையும் பின்பற்றவும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் போன்ற உலகளாவிய பெருந்தொற்றுநோயை நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்றால்தான் எதிர்த்து நின்று போராட முடியும். பிரதமர் மோடியின் வெகுஜன இயக்கத்தில் சேர்ந்து கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக நாம் ஒன்றுபடுவோம். ஒவ்வொருவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுபற்றி அறிந்துகொள்ள வைத்து, நாட்டை கொரோனாவில் இருந்து விடுவிக்க நாம் முக்கிய பங்களிப்போம்.

நாம் கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்க 3 மந்திரங்கள் உண்டு. முக கவசம் அணிவோம். தனிமனித இடைவெளியை பராமரிப்போம். கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்வோம். பிரதமர் மோடியின் இந்த 3 மந்திரங்களை பின்பற்றுவோம். இது நம்மை பாதுகாப்பதுடன், நமது குடும்பத்தையும், நண்பர்களையும், சக பணியாளர்களையும் கொரோனாவில் இருந்து பாதுகாக்கும்.

இவ்வாறு அமித்ஷா கூறி உள்ளார்.

Next Story