தேசிய செய்திகள்

பஸ்வான் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் நேரில் அஞ்சலி பாட்னாவில் அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு + "||" + Funeral today with government honors

பஸ்வான் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் நேரில் அஞ்சலி பாட்னாவில் அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு

பஸ்வான் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் நேரில் அஞ்சலி பாட்னாவில் அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு
மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். பாட்னாவில் அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது.
புதுடெல்லி,

மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மந்திரியும், லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான ராம்விலாஸ் பஸ்வான் (வயது 74) உடல்நலக்குறைவால் டெல்லி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். கடந்த 3-ந் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அவருக்கு மற்றொரு அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என கூறப்பட்டது.


ஆனால் நேற்று முன்தினம் மாலை அவரது உடல்நிலை திடீரென மிகவும் மோசம் அடைந்தது. சிகிச்சை பலனின்றி அவர் மாலை 6.05 மணிக்கு மரணம் அடைந்தார். இதை டுவிட்டரில் அவரது மகன் சிராக் பஸ்வாஸ் உறுதி செய்தார். தாழ்த்தப்பட்ட இன மக்களின் தலைவராக விளங்கிய பஸ்வானின் மறைவு, ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராம் விலாஸ் பஸ்வான் உடல், டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டு பதப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து டெல்லியில் எண்.12, ஜன்பத்தில் அமைந்துள்ள அவரது அதிகாரபூர்வ இல்லத்துக்கு நேற்று காலை எடுத்து வரப்பட்டது. அங்கு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காலை 10.30 மணிக்கு அங்கு வந்து ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியும் ராம் விலாஸ் பஸ்வான் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அத்துடன் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதலும் கூறினார்.

பாரதீய ஜனதா கட்சி தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய மந்திரி கிரிராஜ்சிங் ஆகியோரும் பிரதமருடன் வந்து, பஸ்வான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து உள்துறை மந்திரி அமித் ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் மகள் மிசா பாரதி எம்.பி., காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் மற்றும் பல தலைவர்கள் பஸ்வான் இல்லத்துக்கு வந்து அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

பஸ்வான் மறைவையொட்டி ஜனாதிபதி மாளிகை, நாடாளுமன்றத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.

இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபையின் சிறப்பு கூட்டம் நேற்று காலை நடந்தது. அதில் பஸ்வான் மறைவுக்கு அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், “ராம்விலாஸ் பஸ்வான் மறைவால் ஒரு சிறந்த தலைவரை, புகழ்பெற்ற நாடாளுமன்றவாதியை, திறமையான நிர்வாகியை நாடு இழந்து விட்டது. பஸ்வான் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக விளங்கினார். மேலும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் நலன்களை எப்போதும் முன்னிலைப்படுத்தினார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு அரசின் சார்பிலும், நாட்டின் சார்பிலும் மத்திய மந்திரிசபை தனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது” என கூறப்பட்டிருந்தது.

பஸ்வானின் இறுதிச்சடங்கை முழு அரசு மரியாதையுடன் நடத்துவதற்கு மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை அளித்தது.

மேலும், பஸ்வான் இறுதிச்சடங்கில் மத்திய அரசின் சார்பில் சட்டம், தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கலந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது.

பஸ்வானின் உடல் தனிவிமானம் மூலம் நேற்று அவரது சொந்த மாநிலமான பீகாரின் தலைநகரான பாட்னாவுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு அவரது கட்சி அலுவலகத்தில் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இன்று அவரது உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடக்கிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை