சுவிஸ் வங்கியில் ரகசியமாக பணம் குவித்த இந்தியர்களின் 2-வது பட்டியல் மத்திய அரசின் கைக்கு கிடைத்தது


சுவிஸ் வங்கியில் ரகசியமாக பணம் குவித்த இந்தியர்களின் 2-வது பட்டியல் மத்திய அரசின் கைக்கு கிடைத்தது
x
தினத்தந்தி 10 Oct 2020 5:30 AM IST (Updated: 10 Oct 2020 5:27 AM IST)
t-max-icont-min-icon

சுவிஸ் வங்கியில் ரகசியமாக பணம் குவித்த இந்தியர்களின் 2-வது பட்டியல், மத்திய அரசின் கைக்கு கிடைத்துள்ளது.

புதுடெல்லி,

உலகமெங்கும் கருப்பு பணத்தை பதுக்குபவர்கள், அதை சுவிஸ் நாட்டில் உள்ள வங்கிகளில் ரகசியமாக போட்டுவைக்கிறார்கள். இதற்கு இந்தியர்களும் விதிவிலக்கு இல்லை. அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், நிறுவனங்கள் என பல தரப்பிலும் சுவிஸ் வங்கிகளில் பணத்தை குவித்து வைக்கிறார்கள்.

சுவிஸ் நாட்டின் எப்.டி.ஏ. என்று அழைக்கப்படுகிற பெடரல் வரி நிர்வாகத்துடன் இந்தியா உள்ளிட்ட 86 நாடுகள் தொடர்பில் உள்ளன. இதனால், ஏ.இ.ஓ.ஐ. என்னும் தானியங்கி தகவல் பரிமாற்ற கட்டமைப்பின்கீழ் இந்த நாடுகள், சுவிஸ் வங்கிகளில் பணம் குவித்து வைத்திருக்கிற தனி நபர்கள், நிறுவனங்கள் பற்றிய தகவல்களை பெற முடியும்.

குறிப்பாக 2018-ம் ஆண்டு செயலில் இருந்த அல்லது மூடப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே இந்த தானியங்கி தகவல் பரிமாற்ற கட்டமைப்பு விதிகள் பொருந்தும்.

கடந்த ஆண்டு 75 நாடுகள், சுவிஸ் நாட்டின் பெடரல் வரி நிர்வாகத்துடன் தொடர்பில் இருந்த சுவிஸ் வங்கி கணக்கு ரகசிய தகவல்களை பெற்றன. அந்த வகையில் இந்தியாவும் அங்கு பணம் குவித்துள்ள தனிநபர்கள், நிறுவனங்களின் முதல் பட்டியலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெற்றது.

அதே போன்று தற்போது சுவிஸ் வங்கியில் கருப்பு பணத்தை பதுக்கியிருப்போரின் 2-வது பட்டியலை மத்திய அரசு பெற்றுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படி தகவல்களை பெற்றுள்ள 86 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இது தொடர்பாக பெடரல் வரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை பெற்ற 86 நாடுகளின் பட்டியலில் இந்தியாவை வெளிப்படையாக குறிப்பிடவில்லை. ஆனாலும், சுவிஸ் வங்கிகள் மற்றும் பல்வேறு நிதி நிறுவனங்களில் கணக்கு வைத்துள்ளவர்களின் விவரங்களை பெற்ற முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று அதிகாரிகள், செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்தனர்.

இதுபற்றி அதிகாரிகள் மேலும் கூறுகையில், இந்த ஆண்டு 86 நாடுகளுடன் தொடர்புடைய 30 லட்சம் நிதி கணக்கு விவரங்களை பெடரல் வரி நிர்வாகம் பகிர்ந்து கொண்டுள்ளது, இதில் இந்தியாவிலும் கணிசமான எண்ணிக்கையில் தனிநபர்களும், நிறுவனங்களும் பணத்தை குவித்து வைத்திருப்பது பற்றிய தகவல்களும் அடங்கும் என குறிப்பிட்டனர்.

மேலும், கடந்த ஓராண்டில் வரி ஏய்ப்பு உள்ளிட்ட நிதி மோசடிகளில் சம்மந்தப்பட்ட வழக்குகளின் நிர்வாக உதவிக்கு மத்திய அரசு தகவல்கள் கோரியபோது 100-க்கும் மேற்பட்ட தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் தகவல்களை சுவிஸ் அதிகாரிகள் பகிர்ந்து கொண்டுள்ளனர் எனவும் தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்டபடி 2018-ம் ஆண்டு செயலில் இருந்த அல்லது மூடிவிட்ட வங்கி கணக்கு விவரங்களை மட்டுமே இந்த ஏ.இ.ஓ.ஐ. திட்டத்தின்கீழ் பெற முடியும். இவற்றில், சில பனாமா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், கேமேன் தீவுகள் போன்றவற்றில் இந்தியர்களால் அமைக்கப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்புடையவை என்றும் தனிப்பட்ட நபர்களை பொறுத்தமட்டில் அவர்கள் பெரும்பாலும் தொழில் அதிபர்களும், ஒரு சில அரசியல்வாதிகளும்தான் என கூறப்படுகிறது.

சுவிஸ் அதிகாரிகள் பகிர்ந்துள்ள தகவல்கள் என்ன, என்ன என்று பார்த்தால், அது வங்கி கணக்கு எண், நிதி பரிமாற்ற தகவல்கள், நபர் அல்லது நிறுவனத்தின் பெயர், வரி அடையாள எண், கணக்கில் இருப்பு வைத்துள்ள தொகை, மூலதன வருமானம் போன்றவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல்கள் அடிப்படையில், சம்மந்தப்பட்ட நபர்கள் தங்கள் வருமான வரி கணக்கு தாக்கலில் இதுபற்றி தெரிவித்து இருக்கிறார்களா என்று வருமான வரி அதிகாரிகள் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பார்கள்.

Next Story