ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா உதவியுடன் ஏவுகணை தளங்களை பாகிஸ்தான் அமைக்கிறதா? ராணுவம் மறுப்பு
வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை அமைப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு தளங்களை நிறுவுவதாக தகவல் வெளியாகி இருந்தன.
ஸ்ரீநகர்,
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு உட்பட்ட லசடன்னா தோக் அருகே உள்ள பாலி பிர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை அமைப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு தளங்களை நிறுவுவதாக தகவல் வெளியாகி இருந்தன. பாகிஸ்தான் ராணுவம் சார்பில் நடந்து வரும் இந்த பணிகளுக்கு சீன ராணுவமும் உதவி புரிவதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தன.
இது இந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. லடாக் மோதலுக்கு மத்தியில் சீன-பாகிஸ்தான் ராணுவங்களின் இந்த முயற்சி குறித்த செய்திகள் அதிர்வலைகளை கிளப்பி இருந்தன. ஆனால் இந்த தகவல்களை இந்திய ராணுவம் மறுத்து உள்ளது.
ஸ்ரீநகரை மையமாக கொண்டு செயல்படும் சினார் படைப்பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் ராஜு இது குறித்து கூறுகையில், ‘இந்த தகவல்களை ஊடகங்களில் நானும் பார்த்தேன். பாகிஸ்தானுக்கு சீனா உதவுகிறதோ, சீனாவுக்கு பாகிஸ்தான் உதவுகிறதோ... அப்படி எந்த அறிகுறியும் எங்களுக்கு இல்லை. ஆனால் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் தொடர்பாக பாகிஸ்தானில் சீனாவின் நடமாட்டம் உள்ளது. இந்த கட்டுமானங்களுக்காக இருநாட்டு ராணுவ ஒத்துழைப்பு காணப்படுகிறது. ஆனால் மேற்கூறியது போல எந்தவித ராணுவ தளவாட கட்டுமானங்களும் இல்லை’ என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story