திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்: தினமும் 25 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவு
ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்க உள்ளது. அதில் தினமும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த செப்டம்பர் மாதம் 19-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்தது. அதில் வாகன ஊர்வலம் நடக்கவில்லை. கோவில் உள்ளேயே தினமும் இருவேளை அந்தந்த நாளுக்குரிய வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் இணைந்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கல்யாண உற்சவ மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
அதைத்தொடர்ந்து வருகிற 16-ந்தேதியில் இருந்து 24-ந்தேதி வரை 9 நாட்கள் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்க உள்ளது. இது, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். இந்தப் பிரம்மோற்சவ விழாவில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் வாகன ஊர்வலம் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.
வாகன ஊர்வலத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய ரூ.300 டிக்கெட் பக்தர்கள், ஸ்ரீவாணி டிரஸ்ட்டுக்கு காணிக்கை வழங்கிய பக்தர்கள், சிபாரிசு கடிதம் மூலம் வழங்கப்படும் வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பக்தர்கள், உள்ளூர் பக்தர்கள் எனத் தினமும் 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் பக்தர்கள் வரை நான்கு மாடவீதிகளில் அமர வைக்கப்பட உள்ளனர்.
அடையாள அட்டை வைத்திருக்கும் உள்ளூர் பக்தர்கள் மட்டும் வாகனச் சேவையை பார்க்க நான்கு மாடவீதிகளில் அனுமதிக்கப்படுவர். கொரோனா பரவலை தடுப்பதற்காகவும், பக்தர்கள் இடையூறு இல்லாமல் அமருவதற்காகவும் நான்கு மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் 6 அடி தூரத்துக்கு வெள்ளை நிறத்தில் கட்டங்கள் போடப்பட்டுள்ளது. நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் கொடியேற்றம், கொடியிறக்கம், தேரோட்டம் ஆகியவை நடக்காது.
மேற்கண்ட தகவலை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story