கலாசார ஒற்றுமையை வலுப்படுத்தும் பாடலை பாடிய கேரள பள்ளி மாணவிக்கு பிரதமர் மோடி பாராட்டு


கலாசார ஒற்றுமையை வலுப்படுத்தும் பாடலை பாடிய கேரள பள்ளி மாணவிக்கு பிரதமர் மோடி பாராட்டு
x
தினத்தந்தி 11 Oct 2020 8:41 AM IST (Updated: 11 Oct 2020 8:41 AM IST)
t-max-icont-min-icon

கலாசார ஒற்றுமையை வலுப்படுத்தும் நாட்டுப்புற பாடலை பாடிய கேரள பள்ளி மாணவிக்கு பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்து உள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவை சேர்ந்த பள்ளி மாணவி தேவிகா.  இவர் ஏக் பாரத் ஸ்ரேஸ்த் பாரத் என்ற மத்திய அரசு திட்டத்தின் கீழான இமாசல பிரதேச மாநில மொழியில் அமைந்த பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இடையே கலாசார ஒற்றுமையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டது இந்த ஏக் பாரத் ஸ்ரேஸ்த் பாரத் என்ற திட்டம் ஆகும்.

இந்நிலையில், பள்ளி மாணவியின் பாடலை வீடியோவாக பதிவு செய்து பள்ளிக்கூட முகநூல் பக்கத்தில் தேவிகாவின் ஆசிரியர்கள் வெளியிட்டுள்ளனர்.  இந்த வீடியோ குறுகிய காலஅளவில் பலரை சென்றடைந்து வைரலானது.

இமாசல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்கூர் உள்பட பலரும் பள்ளி மாணவியை பாராட்டியுள்ளனர்.  இதேபோன்று பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தேவிகா பெருமையடைய செய்துள்ளார்!  அவரது மென்மையான பாடல் ஒரே இந்தியா, சிறந்த இந்தியா என்ற சாராம்சத்தினை வலுப்படுத்தி இருக்கிறது என தனது பாராட்டுகளை தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி தேவிகா கூறும்பொழுது, இந்த வீடியோ பிரபலம் அடையும் என நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.  இதற்கு முன் நான் இசையை கற்றதில்லை.  இந்த பாடலை கேட்ட பின்னர் என்னுடைய ஆசிரியர் எனக்கு இசையை கற்று கொடுத்தார்.

என்னை பாடும்படி ஊக்கப்படுத்தி, இசையை கற்று கொடுத்த என்னுடைய ஆசிரியருக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.  நான் வருங்காலத்தில் ஒரு மருத்துவராக வர விரும்புகிறேன்.  பின்னணி பாடகியாகவும் வர ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

Next Story