கிழக்கு லடாக்கில் பதற்றத்தை தணிக்க இந்தியா-சீனா இடையே இன்று 7-வது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை படைகளை விரைவாக வாபஸ் பெற இந்தியா வலியுறுத்தும்
கிழக்கு லடாக்கில் பதற்றத்தை தணிக்க இந்தியா-சீனா இடையே 7-வது சுற்று ராணுவரீதியிலான பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது. இதில், சீன படைகளை விரைவாக வாபஸ் பெற இந்தியா வலியுறுத்தும் என்று தெரிகிறது.
புதுடெல்லி,
கிழக்கு லடாக்கில், கடந்த மே மாதம் சீன படைகள் இந்திய எல்லைக்குள் அத்துமீற துணிந்ததால், இந்திய-சீன படைகள் இடையே மோதல் அபாயம் உருவெடுத்தது. கடந்த ஜூன் 15-ந் தேதி, சண்டை மூண்டது.
அதைத் தொடர்ந்து பதற்றத்தை தணிக்க இரு நாடுகளுக்கும் இடையே ராணுவரீதியிலும், அதிகாரிகள் மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
கடந்த மாதம் 10-ந் தேதி, மாஸ்கோவில், இரு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், படைகளை விரைந்து விலக்கிக்கொள்வது உள்பட 5 அம்ச உடன்பாடு ஏற்பட்டது.
கடந்த மாதம் 21-ந் தேதி, இரு நாடுகள் இடையே ராணுவரீதியிலான 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, கூடுதலாக படைகளை அனுப்பக்கூடாது, நிலைமையை சிக்கலாக்கும் எந்த காரியத்தையும் செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை இரு நாடுகளும் வெளியிட்டன.
இந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) 7-வது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை நடக்கிறது. கிழக்கு லடாக்கில் இந்திய எல்லைக்குட்பட்ட சுசுல் என்ற இடத்தில் பகல் 12 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது.
இந்திய தரப்புக்கு லே பகுதியை சேர்ந்த 14 படைப்பிரிவு தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமை தாங்குகிறார். லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே.மேனன், மத்திய வெளியுறவு அமைச்சக இணை செயலாளர் நவீன் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டோர் இடம் பெறுகிறார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில் எடுத்து வைக்க வேண்டிய வாதங்களை ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையிலான உயர்மட்டக்குழு கடந்த 9-ந் தேதி கூடி முடிவு செய்து விட்டது.
அதன் அடிப்படையில், இந்திய குழு முன்வைக்கப்போகும் வாதங்கள் பற்றி இந்திய வட்டாரங்கள் கூறியதாவது:-
பங்காங் ஏரியின் தென்கரையில் உள்ள மலை முகடுகளில் இந்திய படைகள் நிலைகொண்டுள்ளன. அங்கிருந்து இந்திய படைகளை திரும்பப்பெற வேண்டும் என்று முந்தைய பேச்சுவார்த்தையில் சீன தரப்பு வலியுறுத்தியது.
அதுபோல், இந்த தடவையும் சீனா வலியுறுத்தினால், அதற்கு இந்திய குழு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும். மேலும், கிழக்கு லடாக்கின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சீன படைகளை விரைவாக, முழுமையாக வாபஸ்பெற வேண்டும் என்று இந்திய குழு தெரிவிக்கும். முதல் அடியை சீனாதான் எடுத்து வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும்.
கிழக்கு லடாக்கின் அனைத்து பகுதிகளில் இருந்தும் படைகளை வாபஸ் பெற செயல்திட்டம் உருவாக்குவதுதான், இந்த பேச்சுவார்த்தையின் நோக்கம்.
களத்தில் ஸ்திரத்தன்மையை உருவாக்கவும், அடுத்த 4 மாதங்களுக்கு நிலவும் குளிர்காலத்தின்போது பதற்றத்தை மேலும் அதிகரிப்பதை தவிர்க்கவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Related Tags :
Next Story