மும்பையில் மின் தடை விவகாரம்: ஆய்வு செய்ய மத்திய அதிகாரிகள் குழு செல்கிறது
மும்பை மின்தடையை ஆய்வு செய்யவும், மாநில அரசுக்கு உதவவும் மத்திய அதிகாரிகள் குழு மும்பைக்கு செல்கிறது.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளான ஜூகு, அந்தேரி, மிரா ரோடு, நவி மும்பை, பான்வெல், தானே உள்ளிட்ட இடங்களில் கல்வா பகுதியில் உள்ள டாடா நிறுவனத்தின் மின்விநியோக தொகுப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சார விநியோகம் தடைபட்டது.
மின் தடை ஏற்பட்டதால் பல ரெயில்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சில பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்களும் வேலை செய்யவில்லை. அடுக்குமாடி மற்றும் மருத்துவமனைகளில் உள்ள லிப்டுகள் வேலைசெய்யவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மின்சாரம் செயலிழந்த சில மணி நேரங்களிலேயே #Powercut, #Mumbai மற்றும் #poweroutage போன்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகத் தொடங்கின. பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரும் இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
இந்நிலையில், மும்பையில் ஏற்பட்ட மின்தடை குறித்து மத்திய எரிசக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க இணை மந்திரி (தனிப் பொறுப்பு) ஆர்.கே சிங், கூறியதாவது:
மின்சார விநியோகம் (மும்பையில்) கணிசமான அளவுக்கு சீரமைக்கப்பட்டுள்ளது. தடைபட்ட 2000 மெகாவாட் மின்சாரத்தில், 1900 மெகாவாட் சீரமைக்கப்பட்டுள்ளது.
மீதமிருப்பது விரைவில் சரிசெய்யப்படும். தேசிய விநியோக அமைப்பு நன்றாக உள்ளது, மாநில விநியோக அமைப்பின் சில பகுதிகளில் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார்.
பிரச்சினையை கண்டறியவும், இத்தகைய தடைகளுக்கான சாத்தியமுள்ள தீர்வுகளை கண்டுபிடிக்கவும் மத்திய குழு ஒன்று மும்பைக்கு செல்லவிருக்கிறது என்று ஆர்.கே.சிங் மேலும் கூறினார்.
இதனிடையே மின் தடை குறித்து விசாரணை நடத்த அம்மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story