வருகிற 20-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை 392 பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கம்
வருகிற 20-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதிவரை 392 பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர், புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்து செல்வதற்காக, மே மாதத்தில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து, தேவை அதிகமாக உள்ள வழித்தடங்களில் ரெயில்வே நிர்வாகம் ரெயில்களை இயக்கத் தொடங்கியது. 666 மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்கள், வழக்கமான ரெயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இம்மாதம் துர்கா பூஜை, தசரா போன்ற பண்டிகைகளும், அடுத்த மாதம் தீபாவளி, சாத் பூஜை போன்ற பண்டிகைகளும் வருகின்றன. இதையொட்டி, பயணிகள் சொந்த ஊர்களுக்கும், உறவினர்களின் ஊர்களுக்கும் செல்வார்கள் என்பதால் ரெயில்களின் தேவை அதிகரிக்கும்.
இதை கருத்தில் கொண்டு, 392 பண்டிகை கால சிறப்பு ரெயில்களை இயக்கப்போவதாக ரெயில்வே அமைச்சகம் நேற்று அறிவித்தது.
இந்த ரெயில்கள், இம்மாதம் 20-ந் தேதி முதல் அடுத்த மாதம் 30-ந் தேதிவரை இயக்கப்படும். அதன்பிறகு இந்த ரெயில்கள் இயங்காது.
கொல்கத்தா, பாட்னா, வாரணாசி, லக்னோ உள்ளிட்ட நகரங்களுக்கு இவை இயக்கப்படும். மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். சிறப்பு ரெயில்களுக்கு ஏற்றவகையில் கட்டணம் அமைந்திருக்கும் என்று ரெயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.
அதாவது, சிறப்பு கட்டணம் நிர்ணயிக்கப்படும். அது, வழக்கமான மெயில், எக்ஸ்பிரஸ் டிக்கெட் கட்டணங்களை விட 10 முதல் 30 சதவீதம்வரை அதிகமாக இருக்கும் என்று ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
Related Tags :
Next Story