கொரோனா தடுப்பு மருந்து குறைந்த விலையில் கிடைக்க செய்ய வேண்டும்; பிரதமர் மோடி


கொரோனா தடுப்பு மருந்து குறைந்த விலையில் கிடைக்க செய்ய வேண்டும்; பிரதமர் மோடி
x
தினத்தந்தி 15 Oct 2020 9:54 PM IST (Updated: 15 Oct 2020 9:54 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு மருந்து குறைந்த விலையில், எளிதாக கிடைக்கும்படி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி இன்று நடந்த ஆய்வு கூட்ட முடிவில் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகளால் நாள்தோறும் மக்கள் அதிக இன்னல்களுக்கு ஆட்பட்டு உள்ளனர்.  கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை கண்டறியும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.

இதற்காக பாரத் பையோடெக் நிறுவனம் ஆனது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து உள்நாட்டிலேயே தயாராகும் தடுப்பு மருந்து பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.  இதில் முன்னேற்றம் ஏற்பட்டு 2வது கட்ட பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.  அதன் முடிவுகள் விரைவில் வரவுள்ளன.  இதுதவிர 2 தடுப்பு மருந்துகளுக்கான பரிசோதனைகளும் நடந்து வருகின்றன.

கொரோனாவுக்கு எதிரான போரில் நாட்டு மக்கள் ஈடுபட்டுள்ள சூழலில் கொரோனா பற்றிய ஆய்வு மற்றும் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்ற சூழல் ஆகியவை பற்றி அறிவதற்காக ஆய்வு கூட்டம் ஒன்று இன்று நடந்தது.  இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இதேபோன்று, மத்திய சுகாதார மந்திரி ஹர்ச வர்தன், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்), முதன்மை அறிவியல் ஆலோசகர், மூத்த விஞ்ஞானிகள் மற்றும் பிற அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில், இந்திய கொரோனா தடுப்பு மருந்துகளை உருவாக்கியவர்கள் மற்றும் மருந்து உற்பத்தியாளர்களின் முயற்சிகளை பாராட்டிய பிரதமர் மோடி, அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் உதவி மற்றும் ஆதரவு வழங்க அரசு முனைப்புடன் உள்ளது என கூறினார்.  எனினும் உலகிற்கு தேவையான மருந்துகளை வழங்க கூடிய வகையிலும் இந்தியா இருக்க வேண்டும் என கூறினார்.

கொரோனா வைரசின் பரிசோதனை, தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சை என எதுவாக இருப்பினும் முடிவில் குறைந்த விலையில், மக்களுக்கு எளிதாக மருந்து கிடைக்கும் வகையில் மற்றும் சந்தையின் தேவைக்கு ஏற்ப கிடைக்க செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

Next Story