‘எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது’ - சீனாவுக்கு இந்தியா பதிலடி
அருணாசல பிரதேசம், லடாக் பிராந்தியத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனாவுக்கு, எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என இந்தியா பதிலடி கொடுத்து உள்ளது.
புதுடெல்லி,
கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடுகளும் போராடிக்கொண்டிருக்க, அதை உலகுக்கு அறிமுகப்படுத்திய சீனாவோ, அண்டை நாடுகளை ஆக்கிரமிக்கும் செயலில் இறங்கி உள்ளது. அதன் விளைவு, இந்தியாவின் லடாக் எல்லை பதற்றத்தில் மூழ்கி இருக்கிறது.
லடாக்கில் சுமார் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட படைகளை குவித்திருக்கிறது சீனா. இதனால் இந்தியாவும் பெருமளவில் படைகளை குவித்து இருக்கிறது.
லடாக்கில் மோதலை முடிவுக்கு கொண்டு வந்து, அங்கு அமைதி மற்றும் நிலைத்தன்மையை நிலை நாட்டுவதிலும் இரு நாடுகளும் முனைப்பு காட்டுகின்றன. இதற்காக இருதரப்பு ராணுவ அதிகாரிகள் 7 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கின்றனர்.
என்றாலும் அமைதி நடவடிக்கைகள் அடுத்தடுத்த கட்டங்களை எட்ட முடியாமல் தேக்கமடைந்து உள்ளன. இதனால் பதற்றமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்த பரபரப்பான சூழலில், இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் கட்டப்பட்டிருந்த 44 பாலங்களை கடந்த 12-ந்தேதி ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
லடாக், அருணாசல பிரதேச எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் சீனாவுக்கு இது ஆத்திரத்தை கொடுத்து உள்ளது. ‘இதுவே இருதரப்பு பதற்றத்துக்கான மூல காரணம்’ என அந்த நாடு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நாட்டு வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறும்போது, ‘இருநாட்டு பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட ஒருமித்த முடிவுகளை ஆர்வத்துடன் செயல்படுத்தவும், பதற்றத்தை அதிகரிக்கக்கூடிய செயல்களில் இருந்து விலகி இருக்கவும் இந்தியாவை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்’ என்று கூறினார். மேலும் எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறும் தெரிவித்தார்.
இதைப்போல லடாக் யூனியன் பிரதேசத்தை இந்தியா சட்ட விரோதமாக அமைத்து இருப்பதாக குற்றம் சாட்டிய ஜாவோ, இதை சீனா அங்கீகரிக்கவில்லை எனவும், அதைப்போல அருணாசல பிரதேசத்தையும் அங்கீரிகரிக்கவில்லை என்றும் கூறினார்.
சீனாவின் இந்த கருத்துகள் இந்தியாவுக்கு பெரும் ஆத்திரத்தை கொடுத்து உள்ளது. எனவே இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என சீனாவுக்கு நேற்று இந்தியா பதிலடி கொடுத்தது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
எங்கள் நிலை தெளிவாகவும், நிலையாகவும் உள்ளது. அதாவது ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது, இருக்கிறது, இனியும் இருக்கும்.
இதைப்போல அருணாசல பிரதேச விவகாரத்திலும் எங்கள் நிலையை பலமுறை தெளிவுபடுத்தி இருக்கிறோம். அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் மாற்ற முடியாத பகுதி ஆகும். இந்த உண்மையை உயர்மட்ட ரீதியில் உள்பட பல்வேறு நிகழ்வுகளில் சீனாவுக்கு தெளிவுபடுத்தி இருக்கிறோம்.
இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிக்க சீனாவுக்கு எந்த உரிமையும் இல்லை. ஒவ்வொரு நாடும் பிற நாடுகளிடம் எதிர்பார்ப்பது போல, இந்தியாவும் அதன் உள்நாட்டு விவகாரங்களில் பிற நாடுகள் கருத்து சொல்லாமல் இருக்கும் என நம்புகிறது.
இவ்வாறு அனுராக் ஸ்ரீவத்சவா கூறினார்.
Related Tags :
Next Story