சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஒரு நாளைக்கு 250 பக்தர்களுக்கு அனுமதி


சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஒரு நாளைக்கு 250 பக்தர்களுக்கு அனுமதி
x
தினத்தந்தி 17 Oct 2020 3:11 AM GMT (Updated: 17 Oct 2020 3:13 AM GMT)

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது.

திருவனந்தபுரம்,

சபரிமலை ஐயப்பன் கோவில் ஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அபாயத்திற்கு இடையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. மேலும் சபரிமலை கோயிலில் பின்பற்றப்பட வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கேரள முதல்வர் பினராயி விஜயன் அண்மையில் வெளியிட்டார்.

அதன்படி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 250 பக்தர்கள் மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடல்நிலை மலையேற தகுதியுடன் தான் உள்ளது என உடல்நல தகுதிச்சான்றிதழும் கட்டாயம் வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிலையில் சபரிமலை அய்யப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்காக நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். நேற்றைய தினம் மற்ற பூஜைகள் நடைபெறவில்லை.

அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜை வருகிற 21 -ந் தேதி வரை நடைபெறும். ஆன் லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களில் தினமும் 250 பேர் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க படுவார்கள். அவர்கள் தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக பெறப்பட்ட கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும். நிலக்கல்லில் கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

பம்பையில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பக்தர்கள் குளிப்பதற்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை. அய்யப்ப பக்தர்கள் கொண்டு வரும் நெய், அபிஷேகத்திற்கு பின் பக்தர்களுக்கு சிறப்பு கவுண்டர்கள் வழியாக வழங்கப்படும். அரவணை, அப்பம் வழக்கம் போல் விற்பனை செய்யப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story