பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்பட அனைவரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு-முஸ்லிம் அமைப்பு முடிவு


பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்பட அனைவரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு-முஸ்லிம் அமைப்பு முடிவு
x
தினத்தந்தி 17 Oct 2020 11:30 PM GMT (Updated: 17 Oct 2020 9:41 PM GMT)

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில், அத்வானி உள்ளிட்ட அனைவரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என முஸ்லிம் அமைப்பான அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.

லக்னோ, 

அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, கல்யாண் சிங் உள்ளிட்ட 32 பேரையும் விடுதலை செய்து லக்னோ சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு கடந்த மாதம் 30-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

தீர்ப்பில், பாபர் மசூதி இடிக்கப்பட்டது முன்கூட்டியே திட்டமிட்டு செய்த செயல் அல்ல; குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக உறுதியான ஆதாரங்களையும், சாட்சியங்களையும் சி.பி.ஐ தாக்கல் செய்யவில்லை; குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என கூறப்பட்டுள்ளது.

நீதிபதி எஸ்.கே.யாதவ் வழங்கிய இந்த தீர்ப்பை பாபர் மசூதி நில பிரச்சினையில் முக்கிய வழக்குதாரராக இருந்த இக்பால் அன்சாரி வரவேற்றார். ஆனால் அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர் ஜபார்யாப் ஜிலானி, “இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களை விடுதலை செய்ததில் பெரிய சட்டப்பிழை இருக்கிறது. இது தவறான தீர்ப்பு. இது சாட்சியத்துக்கும், சட்டத்துக்கும் எதிரானது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்” என குறிப்பிட்டார்.

இந்த நிலையில் லக்னோவில் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் செயற்குழு கூட்டம் 2 நாட்களாக நடந்து வந்தது. இந்த கூட்டம் நேற்று முன்தினம் இரவு முடிந்தது.

காணொலி காட்சி வழியாக நடந்த இந்த கூட்டத்தில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்த லக்னோ சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு தீர்ப்பில் உறுப்பினர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதுபற்றி அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் செய்தி தொடர்பாளர் ஜபார்யாப் ஜிலானி நேற்று கூறுகையில், “பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து ஹாஜி மகபூப் மற்றும் சிலர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வார்கள்” என கூறினார்.

மேலும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் செயற்குழு கூட்டத்தில், மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு பொது சிவில் சட்டம் ஒன்றை கொண்டுவருவது தொடர்பான அச்சுறுத்தல்கள் பற்றி விவாதித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் மத அமைப்புகளுக்கு தங்களின் அச்சம் குறித்து தெரிவிப்பது எனவும் முடிவு செய்தனர். இது தொடர்பாக ஒரு குழுவை பொதுச்செயலாளர் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி, இந்திய தண்டனை சட்டத்தையும், குற்றவியல் நடைமுறை சட்டத்தையும் தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான வழிகளை பரிந்துரைக்க ஒரு அறிவுசார் குழுவை அமைக்கவும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்தது.


Next Story