1½ மாதத்துக்கு பின் முதல் முறையாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்துக்கு கீழே சரிவு


1½ மாதத்துக்கு பின் முதல் முறையாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்துக்கு கீழே சரிவு
x
தினத்தந்தி 17 Oct 2020 10:26 PM GMT (Updated: 17 Oct 2020 10:26 PM GMT)

இந்தியாவில் 1½ மாதத்துக்கு பின் முதல் முறையாக சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 8 லட்சத்துக்கு கீழே குறைந்துள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் 1½ மாதத்துக்கு பின் முதல் முறையாக சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 8 லட்சத்துக்கு கீழே குறைந்துள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் அங்கொன்றும், இங்கொன்றுமாக மக்கள் காய்ச்சல், இருமல், சோர்வு உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டபோது, உலக நாடுளை முடக்கப்போகும் வைரஸ் ஒன்று தோன்றியிருப்பதாக யாரும் நினைக்கவில்லை.

ஆனால் அந்த வைரசுக்கு கொரோனா என பெயர் சூட்டி தடுப்பு நடவடிக்கைகளை தொடங்குவதற்குள் உகான் நகரம் முழுவதும் அதன் பிடிக்குள் சிக்கிக்கொண்டது. வைரஸ் தாக்கிய பலரும் மரண தேவதையின் கைகளில் ஐக்கியமாக நேர்ந்தது.

உகானை சின்னாபின்னமாக்கிய கொரோனா பிற நகரங்களுக்கும், மாகாணங்களுக்கும் இரண்டொரு வாரத்தில் பரவியபோது சீனா மட்டுமின்றி உலக நாடுகளும் மிரட்சியடையவே செய்தன. பின்னர் அது சீனா முழுவதும் பரவி, அங்கிருந்து அண்டை நாடுகள், தொலைதூர பிரதேசங்கள் என தனது கொடூர கரத்தை விரித்தபோது ஒட்டுமொத்த உலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

3 மாதங்களுக்குள் அகில உலகிலும் தனது கொடூர கரங்களை பரப்பிய கொரோனாவை தடுக்க மருந்துகளோ, தடுப்பூசியோ கிடைக்காததுதான் பெரும் சோகமாகி விட்டது. எனவே அதற்கான மருந்துகளை உருவாக்குவதற்காக உலக நாடுகளின் ஆய்வகங்கள் இரவு-பகலாக மருந்து ஆராய்ச்சியில் மூழ்கின.

அதற்குள் அனைத்து நாடுகளிலும் கொரோனா மரணங்களும், மரண ஓலங்களும் அதிகரித்து உலகின் இயக்கத்தையே ஸ்தம்பிக்கச் செய்து விட்டது. கொரோனாவில் இருந்து மக்களை காத்துக்கொள்வதற்காக பெரும்பாலான நாடுகளும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு என்னும் பொது முடக்கத்தை அமல்படுத்தி விட்டன.

தோன்றிய 10 மாதங்களுக்குள் 4 கோடியை நெருங்கும் நோயாளிகளையும், 11 லட்சத்துக்கு மேற்பட்ட மரணங்களையும் பரிசளித்து இருக்கிற கொரோனா வைரஸ், இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய எதிரியாக மனித குலத்துக்கு உருவெடுத்து இருக்கிறது.

உலகையே அடக்கி வைத்திருக்கும் கண்ணுக்குத்தெரியாத அந்த வைரசை கொல்வதற்கு இன்னும் மருந்துகளும் கைவரப்பெறவில்லை. இதனால் அரசுகளால் பொது முடக்கத்தை நீக்கிடவும் முடியவில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒருசில கட்டுப்பாடுகளை மட்டுமே விலக்கி மக்களின் சுமுக இயக்கத்தை கட்டுப்படுத்தியே வைத்திருக்கின்றன அரசுகள்.

இப்படி உலகம் முழுவதையும் ஆட்டுவித்து வரும் கொரோனா, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இங்கும் கடந்த ஜனவரி மாத கடைசியில் முதல் கொரோனா தொற்று கேரளாவில் கண்டறியப்பட்டது. முதல் கொரோனா சாவு கர்நாடகாவில் மார்ச் மாதம் நிகழ்ந்தேறியது. அதைத்தொடர்ந்து நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இன்று நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கொரோனா நோயாளிகளும், இறப்புகளும் அன்றாட செய்தியாகி விட்டன.

நாளொன்றுக்கு சில நூறுகளில் தொடங்கிய தொற்று லட்சத்தை தொடும் அளவுக்கும் சென்றது. இதைப்போல மரணங்களும் அங்கொன்றும், இங்கொன்றுமாக முதலில் நிகழ்ந்தாலும் படிப்படியாக அதுவும் ஆயிரத்தை தாண்டும் அளவுக்கு உயர்ந்து விட்டது.

இதை எதிர்பார்த்தே இந்தியாவும் கடந்த மார்ச் இறுதியில் ஊரடங்கை அமல்படுத்தி விட்டது. எனினும் ஜூன் மாதம் முதல் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது.

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று தற்போது குறையத்தொடங்கி உள்ளது. இதைப்போல சாவு எண்ணிக்கையும் சரிந்து வருகிறது. அந்த வகையில் சுமார் 1 லட்சம் அளவுக்கு சென்ற தினசரி தொற்று தற்போது 60 ஆயிரத்தை தாண்டிய அளவிலேயே நீடிக்கிறது. இதைப்போல சாவு எண்ணிக்கையும் தொடர்ந்து ஆயிரத்துக்கு கீழேயே இருந்து வருகிறது.

இதில் மேலும் ஒரு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக, நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 1½ மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக 8 லட்சத்துக்கு கீழே குறைந்து உள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி 7 லட்சத்து 95 ஆயிரத்து 87 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

கடைசியாக கடந்த மாதம் 1-ந் தேதிதான் 7,85,996 பேர் சிகிச்சையில் இருந்தனர். அதைத்தொடர்ந்து தினமும் அதிகரித்த தொற்று காரணமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்து சென்றிருந்தது. அதன்பிறகு தற்போதுதான் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 8 லட்சத்துக்கு கீழே சரிந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 10.70 சதவீதம் ஆகும்.

தினமும் அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகள் குணமடைந்து வருவதால்தான், சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைவதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. குறிப்பாக நாடு முழுவதும் மருத்துவ கட்டமைப்பு மேம்பாடு, மத்திய அரசின் நிலையான சிகிச்சை வழிமுறைகளை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பின்பற்றுவது, அர்ப்பணிப்புடன் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களால் இது சாத்தியமாகி இருப்பதாகவும் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அதிகப்படியான நோயாளிகள் குணமடைந்து வரும் வரிசையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 70 ஆயிரத்து 816 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 65 லட்சத்து 24 ஆயிரத்து 595 ஆக அதிகரித்து உள்ளது. இதன் மூலம் குணமடைந்தவர்களின் விகிதம் 87.78 ஆக உயர்ந்து உள்ளது.

65 லட்சத்துக்கு மேற்பட்டோர் குணமடைந்திருப்பதன் மூலம் உலக அளவில் அதிக குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

புதிதாக குணமடைந்தவர்களில் 78 சதவீதத்தினர் மராட்டியம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, உத்தரபிரதேசம், டெல்லி, மேற்கு வங்காளம், சத்தீஷ்கார், ஒடிசா ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.


இதற்கிடையே நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 62 ஆயிரத்து 212 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இவர்களையும் சேர்த்து நாட்டின் மொத்த பாதிப்பு 74 லட்சத்து 32 ஆயிரத்து 680 ஆகியிருக்கிறது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 69 சதவீதத்தினர் மேற்படி 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதில் அதிகபட்சமாக மராட்டியர்கள் மட்டுமே 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தலா 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொற்றில் சிக்கியுள்ளனர். கொரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக 2-ம் இடத்தில் இந்தியா நீடித்து வருகிறது.


இதைப்போல மேற்படி 24 மணி நேரத்தில் 837 பேர் கொரோனாவால் மரணத்தை தழுவி இருக்கின்றனர். எனினும் நாட்டின் கொரோனா சாவு விகிதம் 1.52 சதவீதமாகவே நீடிக்கிறது. புதிதாக பலியானவர்களில் அதிகபட்சமாக மராட்டியத்தில் மட்டுமே 306 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க நாட்டில் நடந்து வரும் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் 9 லட்சத்து 99 ஆயிரத்து 90 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் இதுவரை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 9.32 கோடி ஆகும்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் வீரியம் குறைய தொடங்கி இருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



Next Story