தேசிய செய்திகள்

7 மாதங்களுக்கு பிறகு சரணகோஷம் ஒலித்தது: சபரிமலை கோவிலில் பக்தர்கள் அனுமதி - சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் + "||" + Only 250 Devotees A Day, Covid Tests Must As Sabarimala Temple Reopens

7 மாதங்களுக்கு பிறகு சரணகோஷம் ஒலித்தது: சபரிமலை கோவிலில் பக்தர்கள் அனுமதி - சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம்

7 மாதங்களுக்கு பிறகு சரணகோஷம் ஒலித்தது: சபரிமலை கோவிலில் பக்தர்கள் அனுமதி - சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம்
7 மாதங்களுக்கு பிறகு சரண கோஷத்துடன் சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அங்கு சமூக இடைவெளியுடன் அய்யப்பனை தரிசனம் செய்தனர்.
சபரிமலை,

கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கடந்த 7 மாதமாக இதே நிலை நீடித்து வந்தது. அதே சமயத்தில் கேரளாவில் உள்ள முக்கிய கோவில்களான திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் கொரோனா விதிமுறையை பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இதேபோல் சபரிமலையிலும் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. திருவிதாங்கூர் தேவசம் போர்டும், கேரள அரசும் இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டு முக்கிய முடிவை எடுத்தது. அதாவது, ஐப்பசி மாத பூஜையின் போது சபரிமலைக்கு பக்தர்கள் செல்லலாம், அதே சமயத்தில் தினமும் 250 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வதோடு, 24 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் பூஜை மற்றும் தீபாராதனைக்கு பிறகு மீண்டும் நடை அடைக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் (அதாவது நேற்று) 21-ந் தேதி வரை கோவிலில் 5 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது, பக்தர்கள் சரண கோஷத்துடன் 18-ம் படி வழியாக ஏறி சன்னிதானத்துக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்தனர். 7 மாதங்களுக்கு பிறகு பக்தர்களின் சரணகோஷம் சபரிமலையில் எதிரொலித்தது. அதாவது, சாமியே சரணம் அய்யப்பா என்ற சரண கோஷத்தை பக்தர்கள் தொடர்ந்து எழுப்பியபடி இருந்தனர். அய்யப்பனை தரிசனம் செய்த மகிழ்ச்சியில் அன்றைய தினமே பக்தர்கள் வீட்டிற்கு புறப்பட்டனர். சபரிமலையில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற அங்கு வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. சபரிமலைக்கு வந்த பக்தர்களில் பெரும்பாலானவர்கள் கேரளா, தமிழகம், ஆந்திர மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சபரிமலை அய்யப்பன் கோவில் மேல் சாந்தியை தேர்வு செய்வதற்கான குலுக்கல் நடவடிக்கையும் தொடங்கியது. ஏற்கனவே நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 9 பேரின் பெயர்கள் எழுதப்பட்ட துண்டு சீட்டுகள் வெள்ளி குடத்தில் போடப்பட்டது. மேலும் மற்றொரு வெள்ளி குடத்தில் மேல்சாந்தி என்று எழுதப்பட்ட ஒரு துண்டு சீட்டும், பெயர்கள் எழுதப்படாத 8 துண்டு சீட்டுகளும் போடப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பூஜைக்கு பிறகு குலுக்கல் மூலம் பந்தளம் கொட்டாரத்தில் இருந்து வந்த மன்னர் குடும்பத்தை சேர்ந்த சிறுவன் கவுசிக் வர்மா சபரிமலை மேல் சாந்தியாக திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூரை சேர்ந்த வி.கெ. ஜெயராஜ் போற்றியை தேர்வு செய்தார்.

7-வது முறை எடுக்கப்பட்ட சீட்டில், மேல்சாந்தி என்று எழுதப்பட்ட சீட்டும் வி.கெ.ஜெயராஜ் போற்றி என்று எழுதப்பட்ட சீட்டும் எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து சபரிமலை மேல்சாந்தியாக வி.கெ.ஜெயராஜ் போற்றியின் பெயரை சிறப்பு அதிகாரி மனோஜ் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

பின்னர் மாளிகப்புரம் மேல்சாந்தி தேர்வு, குலுக்கல் மூலம் அதே முறைப்படி நடந்தது. 5-வது முறையாக எடுக்கப்பட்ட சீட்டில் மேல்சாந்தி என்று எழுதப்பட்ட சீட்டும் எம்.என்.ரெஜிகுமார் என்று எழுதப்பட்ட சீட்டும் எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து எம்.என்.ரெஜிகுமார் மாளிகப்புரம் மேல் சாந்தியாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். அவர், அங்கமாலியை சேர்ந்தவர். அவரை பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்த ரிஷிகேஷ் வர்மா தேர்வு செய்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும் நவம்பர் 15-ந் தேதி தந்திரி முன்னிலையில் மூலமந்திரங்கள் சொல்லி பொறுப்பேற்று கொள்வார்கள். இவர்கள் நவம்பர் 16-ந் தேதி (கார்த்திகை 1-ந் தேதி) மண்டல பூஜையை முன்னிட்டு நடையை திறந்து வைத்து பூஜை, வழிபாடுகளை செய்வார்கள். இவர்களது பணிக் காலம் ஒரு வருடம் ஆகும்.


தொடர்புடைய செய்திகள்

1. "சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைக்கு தினமும் 250 பேர் மட்டும் அனுமதி" - பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு
சபரிமலை ஐப்பசி மாத பூஜைக்கு தினமும் 250 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
2. சபரிமலையில் நவ.16 முதல் பக்தர்கள் அனுமதி: பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
சபரிமலையில் நவ.16 முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
3. ஓணம் பண்டிகைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது
ஓணம் பண்டிகைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று (சனிக்கிழமை) திறக்கப்படுகிறது. தொடர்ந்து 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
4. மண்டல, மகரவிளக்கு சீசனுக்குசபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி -கேரள மந்திரி தகவல்
சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன் கூறினார்.