ஓணம் பண்டிகை தளர்வுகளால் கொரோனா பாதிப்புகள் உயர்வு; கேரளாவை சாடிய மத்திய சுகாதார மந்திரி


ஓணம் பண்டிகை தளர்வுகளால் கொரோனா பாதிப்புகள் உயர்வு; கேரளாவை சாடிய மத்திய சுகாதார மந்திரி
x
தினத்தந்தி 18 Oct 2020 6:27 PM IST (Updated: 18 Oct 2020 6:27 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து உள்ளன என மத்திய சுகாதார மந்திரி சாடியுள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா பாதிப்புகள் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து அதிகரிக்க தொடங்கிய பின்னர் நாடு முழுவதும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது.  இது, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம், பொருளாதார தேக்கம் உள்ளிட்ட விளைவுகளை ஏற்படுத்தின.  இதனையடுத்து ஊரடங்கில் கடுமையான விதிமுறைகளுடன் தளர்வுகள் வெளிவந்தன.  கொரோனாவுக்கு தடுப்பு மருந்து இன்னும் கண்டறியப்படாத சூழலில், மக்கள் அரசின் விதிகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டனர்.

நாட்டில் மராட்டியம் மற்றும் தமிழகம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் அடுத்தடுத்து உள்ளன.  எனினும் தமிழகத்திற்கு அருகேயுள்ள கேரளாவில் பெருமளவில் பாதிப்புகள் காணப்படவில்லை.

கேரளாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தி விட்டோம் என மாநில சுகாதார மந்திரி சைலஜா பெருமைப்பட கூறினார்.  கேரளாவில் ஒவ்வொரு வருடமும் ஓணம் பண்டிகை சிறப்புடன் கொண்டாடப்படுவது வழக்கம்.  இந்நிலையில், கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பண்டிகைகால வர்த்தகம் பெரிதும் முடங்கியிருந்தது.

எனினும், வர்த்தகம் மற்றும் சுற்றுலாக்களுக்கு கேரள அரசு தளர்வுகளை அறிவித்தது.  இதனால், ஓணம் பண்டிகைக்காக மக்கள் தேவையான பொருட்களை வாங்க கடைகளில் குவிந்து விட்டனர்.  அரசின் விதிகளை கடைப்பிடிக்க தவறி விட்டனர்.

இதன் எதிரொலியாக கடந்த சில நாட்களாக கேரளாவில் நாளொன்றுக்கு 9 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்புகள் ஏற்பட தொடங்கின.  இதனால், 4 ஆயிரம் அளவுக்கு பாதிப்புகள் குறைந்த தமிழ்நாட்டை கேரளா பின்னுக்கு தள்ளியது.

இதுபற்றி மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் கூறும்பொழுது, சமீபத்தில் கேரளாவில் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.  ஓணம் பண்டிகைக்காக அறிவிக்கப்பட்ட தளர்வுகளால், கட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டன.  வர்த்தகம், சுற்றுலா ஆகியவற்றில் மக்கள் ஈடுபட்டது கொரோனா பரவலுக்கு வழிவகுத்து விட்டது.  பண்டிகை காலங்களில் விதிகளை அலட்சியம் செய்வதனால் ஏற்பட்ட இந்த நிலை, அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்து உள்ளது என கூறினார்.

Next Story