கேரள முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கருக்கு நெருக்கடி- எந்த நேரமும் கைதாகலாம் என பரபரப்பு தகவல்


கேரள முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கருக்கு நெருக்கடி- எந்த நேரமும் கைதாகலாம் என பரபரப்பு தகவல்
x

கேரள தங்கம் கடத்தல் வழக்கில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரை சுங்கத்துறையினர் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

திருவனந்தபுரம், 

கேரள தங்கம் கடத்தல் வழக்கில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரை சுங்கத்துறையினர் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர். கேரள தங்கம் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேசுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. அதே சமயத்தில் சட்ட விரோதமாக ஸ்வப்னா சுரேசுக்கு அவர் பல்வேறு வகையில் உதவி செய்துள்ளதாகவும் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணையில் தெரிய வந்தது.

தற்போது இடைநீக்கத்தில் உள்ள அவரிடம் சுங்கத்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் விசாரணை நடத்தியது. மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து சிவசங்கரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சுங்கத்துறையினர் கூறியுள்ளனர்.

பின்னர் அவர் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வருகிற 23-ந் தேதி வரை சிவசங்கரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே சிவசங்கர் நெஞ்சு வலிப்பதாக கூறி தனது மனைவி டாக்டராக பணி செய்யும் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் இதயத்தின் செயல்பாடு சீராக உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது.

ஆனால் முதுகு தண்டுவடத்தில் சிறு பிரச்சினை இருப்பதாக கூறி அவரை திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், சிவசங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர் சிகிச்சை பெறும் அறை பகுதியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையை போட உள்ளதாகவும் தெரிகிறது. இதனால் சிகிச்சை முடிந்ததும் அவரை எந்த நேரமும் கைது செய்யும் நடவடிக்கையில் சுங்கத்துறையினர் ஈடுபடலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.


Next Story