லடாக்கில் நுழைந்த சீன ராணுவ வீரர் பிடிபட்டார்; முறைப்படி திரும்ப ஒப்படைக்கப்படுவார் என தகவல்


லடாக்கில் நுழைந்த சீன ராணுவ வீரர் பிடிபட்டார்; முறைப்படி திரும்ப ஒப்படைக்கப்படுவார் என தகவல்
x
தினத்தந்தி 19 Oct 2020 2:59 PM IST (Updated: 19 Oct 2020 2:59 PM IST)
t-max-icont-min-icon

லடாக்கில் இந்திய எல்லை பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவ வீரர் இந்திய வீரர்களால் பிடிக்கப்பட்டு உள்ளார்.

சுமர்,

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15ந்தேதி இரவு இந்தியா மற்றும் சீனா ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் 35 பேர் பலியாகி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.  எனினும் இதனை சீனா தொடர்ந்து மறுத்தது.

50 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய இந்த மோதலுக்கு சீனாதான் காரணம் என இந்தியா குற்றம் சாட்டியது. லடாக் பிராந்திய எல்லையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இயல்பு நிலையை ஒருதலைப்பட்சமாக சீனா மீற முயன்றதாலேயே இந்த மோதல் ஏற்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்தது.

இதனை தொடர்ந்து இரு நாட்டு எல்லைகளிலும் வீரர்கள் குவிக்கப்பட்டனர்.  இதனால் தொடர்ந்து பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.  பின்னர் ராணுவ மட்டத்திலான இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பின்பு படைகளை வாபஸ் பெற முடிவானது.

எனினும், எல்லை விவகாரம் தொடர்ந்து நீடித்து வருகிறது.  இந்த நிலையில், லடாக்கின் சுமர்-டெம்சோக் பகுதியில் சீன ராணுவ வீரர் ஒருவரை இந்திய ராணுவம் சிறை பிடித்துள்ளது.

அவர் தவறுதலாக இந்திய எல்லை பகுதிக்குள் நுழைந்திருக்க கூடும் என்றும், அவரை சீன ராணுவத்திடம் மீண்டும் ஒப்படைப்பதற்கான பணிகள், ராணுவத்தில் கடைப்பிடிக்கப்படும் நெறிமுறைகளின்படி நடைபெறும் என்றும் இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story